சாதிச்சான்றிதழ் வழங்காத அலுவலர்களை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்
தண்டராம்பட்டில் பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் வழங்காத அலுவலர்களை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகாவில் குறிப்பாக தானிப்பாடி பகுதியை ஒட்டியுள்ள மலை கிராமங்களில் குரும்பர் இன மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது சில ஆண்டுகளாக இந்த சாதி சான்றிதழ் வழங்காமல் அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். இதனால் இந்த இனத்தை சேர்ந்த மக்கள் பள்ளியில் சேரவும் வேலை வாய்ப்பு பெறவும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். பலமுறை சாதி சான்றிதழ் கேட்டு போராட்டங்களும் நடத்தப்பட்டது.கோட்டாட்சியர் தலைமையிலும் சம்பந்தப்பட்ட கிராமங்களில் நேரடி விசாரணை நடத்தப்பட்டது ஆனாலும் சாதி சான்றிதழ் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.
எனவே தண்டராம்பட்டு தாலுகாவில் உள்ள வருவாய் அதிகாரிகளின் இந்த மெத்தனப் போக்கை கண்டித்து குருமன்ஸ் இன மக்கள் தண்டராம்பட்டு தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர் அதிகாரிகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் பரிமளா, துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, மண்டல துணை தாசில்தார் விஜயகுமார், வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார் வி.ஏ.ஓ. ஜெயந்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் வீடுகளில் நேரடி விசாரணை நடத்தப்பட்டு கோட்டாட்சியருக்கு கோப்புகள் அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.திருவண்ணாமலை கோட்டாட்சியர் இறுதி முடிவு எடுத்து சான்றிதழ் வழங்குவார். எனவே 2 நாட்கள் அதற்கான கால அவகாசம் வழங்கும்படி கேட்டுக் கொண்டனர்.இதனையடுத்து போராட்டக்காரர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.