திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.;
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்திருப்பதால், பெரும்பாலான மாவட்டங்களில் பரவலான கனமழை பெய்து வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம், நேற்று வரை இடி மின்னலுடன் கூடிய பரவலான கனமழை பெய்தது.
திருவண்ணாமலை நகரின் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்தது. மேலும், மாவட்டத்தின் பெரும்பாலான ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், மாவட்டம் முழுவதும் பரவலான மழை பெய்ததாலும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததாலும் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.
செங்கத்தை அடுத்த ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள குப்பனத்தம், கல்லாத்தூா் பகுதியில் 14 செ.மீ. மழை பதிவானது.
இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மலைக் கிராம மக்களின் ஆடு, மாடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள கிளையூா், கல்லாத்தூா், ஊா்கவுண்டனூா், பண்ரேவ், குப்பனத்தம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திடீரென பலத்த மழை பெய்தது.
அந்த மழையில் ஜவ்வாதுமலை பகுதியில் உள்ள ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வெள்ளத்தில் மலை அடிவாரத்தில் விவாசாய நிலத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட பசுக்கள், ஆடுகள் மற்றும் விவசாயத்துக்கு பயன்படுத்தும் மாடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
தகவலறிந்த செங்கம் தீயணைப்பு படையினா் சென்று மாடுகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தை அவா்களால் சமாளிக்க முடியாமல் அங்கிருந்த மக்களை மட்டும் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து வந்துவிட்டனா்.
அடித்துச் செல்லப்பட்ட மாடுகள், ஆடுகள் ஊா்கவுண்டனூா், கிளையூா் பகுதி கால்வாய்கள் ஓரம் இறந்து கிடப்பதை, அதன் உரிமையாளா்கள் கண்டறிந்தனா்.
இதனால் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாடுகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
மாவட்டத்தில் பதிவான மழை அளவு
திருவண்ணாமலை 43 மிமீ, செங்கம் 18.2 மிமீ, போளூர் 70 மிமீ, ஜமுனாமரத்தூர் 61 மிமீ, கலசபாக்கம் 65.6 மிமீ, தண்டராம்பட்டு 31 மிமீ, ஆரணி 3 மிமீ மழை பதிவானது.
அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததாலும் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 266 கன அடி நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 119 அடியில், தற்போது 91.70 அடியாகவும், கொள்ளளவு 2648 மி.கன அடியாகவும் உயர்ந்துள்ளது.
அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
அதேபோல், குப்பனத்தம் அணைக்கு வினாடிக்கு 3140 கன அடி நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 49.03 அடியாகவும், கொள்ளளவு 4546 மி.கன அடியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. மிருகண்டா அணைக்கு வினாடிக்கு 205 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையின் நீர்மட்டம் 18.20 அடியாகவும், கொள்ளளவு 61.76 மி.கன அடியாகவும் உள்ளது. செண்பகத்தோப்பு அணைக்கு வினாடிக்கு 275 கன அடி நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 57.20 அடியாகவும், 234.83 மி.கன அடியாகவும் உள்ளது.
ஆரணி கமண்டல நாக நதியில் இரு கறைகளையும் தொட்டு வெள்ள நீர் செல்வதால் எச்சரிக்கை பலகை வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆரணி கண்ணமங்கலம் படவேடு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது இதனால் செண்பகத் தோப்பு அணை நிரம்பி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது இதனால் கண்ணமங்கலம் பகுதி நாக நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
நதியின் இரு கறைகளையும் தண்ணீர் தொட்டு செல்வதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று பார்வையிட்டு வருகின்றனர். அப்பகுதியில் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது.