பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டுவதற்கு நிதியுதவி
திருவண்ணாமலை மாவட்டத்தில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டுவதற்கான உத்தரவு ஆணைகளை கலெக்டர் வழங்கினார்;
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மேல்ராவந்தவாடி கிராமத்தில் இன்று நிவர் புயல் காரணமாக முருகதாஸ் மற்றும் கண்ணதாசன் ஆகியோர் வசித்து வந்த வீடுகள் முற்றிலும் சேதமடைந்தது. முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 2.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடுகள் கட்டுவதற்கான உத்தரவு ஆணைகளை நேரில் சென்று மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
அதே கிராமத்தில் கண்ணன் தனது குடும்பத்தினருடன் தனது வயதான தாயார் ஆகியோருடன் கூரை மற்றும் ஓட்டு வீடுகளில் வசித்து வந்துள்ளார். நிவர் புயல் காரணமாக இவர்கள் வசித்து வந்த வீடுகள் பயன்படுத்த முடியாத நிலையில் முற்றிலும் சேதமடைந்துள்ளது
இதனால் இவர்கள் குடும்பத்தினர் மற்றும் மேல்ராவந்தவாடி பகுதியைச் சேர்ந்த மேலும் இரண்டு குடும்பத்தினர் அருகில் உள்ள கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் தற்காலிகமாக தங்குவதற்கு அரசு சார்பில் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. கண்ணன் மற்றும் கண்ணதாசன் துப்புரவு பணி செய்து தங்கள் குடும்பங்களை மிகுந்த சிரமப்பட்டு காப்பாற்றி வருகிறார்கள். இந்நிலையில் இவர்கள் தங்களது வீடுகள் பயன்படுத்த முடியாமல் முற்றிலும் சேதமடைந்தது சீரமைக்க பணம் இல்லாத காரணத்தால் அரசு மூலம் புதிய வீடுகள் கட்டி தருவதற்கு கோரிக்கை வைத்து இருந்தார்கள்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர், அவர்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் இன்று மேல்ராவந்தவாடி கிராமத்திற்கு நேரில் சென்று முருகதாஸ் மற்றும் கண்ணதாசன் குடும்பத்தினருக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டுவதற்கான உத்தரவு ஆணைகளை வழங்கினார். மேலும் அரசு சார்பில் இரண்டு மாதங்களுக்குள் புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என முருகதாஸ் மற்றும் கண்ணதாசன் குடும்பத்தினரிடம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.
தமிழக அரசுக்கும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் , கிராம மக்களுக்கும் முருகதாஸ் மற்றும் கண்ணதாசன் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.