உடல் உறுப்பு தானம் seitha தொழிலாளி உடலுக்கு அரசு மரியாதை

உடல் உறுப்பு தானம் செய்த தண்டராம்பட்டு அடுத்த தேசூர்பாளையம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது

Update: 2024-05-28 02:43 GMT

அரசின் சார்பில் அஞ்சலி செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய ஆர்டிஓ மந்தாகினி

உடல் உறுப்புகளை தானமாக வழங்கி பல உயிர்களை காப்போரின் தியாகத்தினை போற்றிடும் வகையில் அவர்களது உடலுக்கு இறுதி சடங்குகள் அரசு மரியாதைகளுடன் மேற்கொள்ளப்படும் என கடந்த ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தேசூர்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு. கூலித்தொழிலாளி. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலு தனது இருசக்கர வாகனத்தில் தண்டராம்பட்டு பதிவுத்துறை அலுவலகம் வழியாக சென்றபோது எதிரே வந்த வாகனத்துடன் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு தண்டராம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

தொடர்ந்து, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, கூலித்தொழிலாளி வேலு மூளைச்சாவு அடைந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவரது மனைவி ஒப்புதலின்பேரில், வேலுவின் கண், நுரையீரல், கல்லீரல், இதயம் உட்பட உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.

இந்நிலையில், அவரது உடல் சொந்த கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு, உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் இறுதிச்சடங்குகளை செய்தனர். மேலும், உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்ட கூலித்தொழிலாளி வேலுவின் உடலுக்கு அரசு மரியாதையாக, ஆர்டிஓ மந்தாகினி நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது, தாசில்தார் நடராஜன், மண்டல துணை வட்டாட்சியர்  விஜயகுமார், வருவாய் ஆய்வாளர் கோவிந்தராஜூலு, விஏஓ அழகேசன்,  வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம உதவியாளர்கள், அரசு அலுவலர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் , பொதுமக்கள் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

உடல் உறுப்புகள் தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கானோருக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகிறது. மூளைச்சாவு அடைந்த துயர சூழ்நிலையிலும், உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால் தான் இந்த சாதனை சாத்தியமாகி உள்ளது.

Tags:    

Similar News