அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: 3 மாணவா்கள், ஒரு ஆசிரியா் பலத்த காயம்
செங்கம் எம்எல்ஏ கிரி உடனடியாக தண்டராம்பட்டு அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த மாணவர்களையும், ஆசிரியரையும் பார்த்து ஆறுதல் கூறினார்.;
செங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மு.பெ.கிரி, படுகாயம் அடைந்த மாணவர்களையும், ஆசிரியரையும் பார்த்து ஆறுதல் கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தரடாப்பட்டு ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு வரை 454 மாணவர்கள் படிக்கின்றனர். இங்குள்ள 2 அடுக்குமாடி கட்டிடம் கடந்த 2015ல் அதிமுக ஆட்சியின்போது ரூ.58 லட்சம் செலவில் கட்டப்பட்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று 6ம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியர் தினகரன் பாடம் நடத்தி கொண்டிருந்தார்.
அப்போது, வகுப்பறையின் மேற்கூரையில் இருந்த சிமெண்ட் பூச்சுகள் திடீரென உதிர்ந்து விழுந்து. 3 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் தினகரன் ஆகியோர் மீது சிமெண்ட் பூச்சுகள் விழுந்து படுகாயம் அடைந்தனர். அவர்களை மற்ற ஆசிரியர்கள் மீட்டு தண்டராம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில், ஒரு மாணவர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
செங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மு.பெ.கிரி உடனடியாக தண்டராம்பட்டு அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த மாணவர்களையும், ஆசிரியரையும் பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் மருத்துவமனையின் வெளியே இருந்த மாணவர்களின் பெற்றோர்களிடம் எம்.எல்.ஏ. கிரி கூறுகையில், ''தடராப்பட்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி கட்டிடங்கள் கட்டி 12 வருடங்கள் ஆகிறது. இந்த பள்ளி கட்டிடங்களை கடந்த 10 வருடங்களாக ஆட்சியில் இருந்தவர்கள் சரிவர பராமரிப்பு செய்யவில்லை.இந்த பள்ளி கட்டிட முறைகேடை கலெக்டரிடம் எடுத்துரைத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன். மேலும் இந்த சம்பவத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் கூறி பள்ளி கட்டிடங்களை புனரமைப்பு செய்ய கோரிக்கை வைப்பேன்'' என்றார்.