செங்கத்தில் சமுதாய கழிப்பறை கட்டிடங்களை திறந்து வைத்த கிரி எம்.எல்.ஏ.
செங்கத்தில் சமுதாய கழிப்பறை கட்டிடங்களை கிரி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.;
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தேர்வு நிலை பேரூராட்சி கிருஷ்ணாபுரம், நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் சமுதாய கழிப்பறை கட்டிடங்கள் மற்றும் குடிநீர் மினி டேங்க் ஆகியவற்றை பேரூராட்சி தலைவர் சாதிக் பாஷா, கவுன்சிலர் சந்தியா ஆகியோர் முன்னிலையில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
தொடர்ந்து கிருஷ்ணாபுரம் கிழக்கு பகுதியில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் 3 லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்பீட்டில் பேரூராட்சி பொது நிதியில் கட்டப்பட்ட ஆழ்துளை கிணற்றுடன் சிறு மின்விசை பம்பு உள்ளிட்டவைகளை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் கிரி வழங்கி சிறப்பித்தார்.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா
தொடர்ந்து செங்கம் நகரம் நேரு நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி வழங்கினார்.
செங்கம் நகரம் நேரு நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் மாணவர்கள் நடனம், நாடகம், பாடல்கள், திருக்குறள் ஒப்புவித்தல், தேசிய தலைவர்கள் பற்றிய வரலாறு ஒப்புவித்தல் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
மேலும் பள்ளியில் சிறப்பாக படித்த மாணவர்களுக்கு மற்றும் விடுமுறை இன்றி தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரிந்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
பரிசுகளை வழங்கி மாணவர்களை வாழ்த்தி கிரி எம் எல் ஏ பேசும்போது ,
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எப்போதும் துணையாக இந்த அரசு இருக்கும். வறுமைக்கோட்டில் பின் தங்கிய மக்களுக்கு எப்போதுமே தமிழ்நாடு அரசு பாதுகாப்பாக இருக்கும். மகளிர் உரிமை தொகை, அரசு பேருந்துகளில் மகளிர் இலவச பயண திட்டம், ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, போன்ற திட்டங்களை இந்த அரசு வழங்கி வருகிறது என எம் எல் ஏ பேசினார்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகேயன், பேரூராட்சி தலைவர் சாதிக் பாஷா, வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், நேரு நகர் இளைஞர்கள் சங்க உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர், துப்புரவு ஆய்வாளர்கள், மாவட்ட அணி நிர்வாகிகள் ,பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.