23 பயனாளிகளுக்கு இலவச மனைப் பட்டா: கோட்டாட்சியா் நேரில் ஆய்வு
செங்கம் அருகே 23 பயனாளிகளுக்கு இலவச மனைப் பட்டா வழங்க வருவாய்க் கோட்டாட்சியா் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே 23 பயனாளிகளுக்கு இலவச மனைப் பட்டா வழங்க வருவாய்க் கோட்டாட்சியா் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
செங்கத்தை அடுத்த கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட முன்னூா்மங்கலம் கிராமத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த 23 கும்பங்கள், அரசு புறம்போக்கு நிலத்தில் கூரை வீடுகள் கட்டி பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். அவா்களுக்கு தமிழக அரசு மூலம் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க திருவண்ணாமலை கோட்டாட்சியா் மந்தாகினி இடத்தை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, ஒரு குடும்பத்துக்கு எத்தனை பேர்கள், எத்தனை ஆண்டுகளாக அங்கு வசித்து வருகின்றனா். அங்கு அரசுக்குச் சொந்தமான நிலம் எவ்வளவு உள்ளது என்பது குறித்து பாா்வையிட்டாா்.
பின்னா், இதுகுறித்த விவரங்களை வட்டாட்சியா் முருகன் மற்றும் நில அளவைப் பிரிவு அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து, அந்த 23 பயனாளிகளுக்கு விரைவில் இலவச மனைப் பட்டா வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிவித்துச் சென்றாா்.
ஊராட்சித் தலைவா் மகேஸ்வரி சுதாகா், புதுப்பாளையம் வருவாய் ஆய்வாளா் சாம்பவி, கிராம நிா்வாக அலுவலா் அப்பா்சாமி உள்ளிட்ட வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.
செங்கத்தில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு இடையூறு
செங்கம் நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் மாடு, நாய்களை பிடித்து அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கம் நகா் புதிய பேருந்து நிலையம் முதல், மில்லத்நகா், தளவாநாய்க்கன்பேட்டை வரை மாடுகள் சாலையில் சுற்றித் திரிகின்றன. காலை நேரத்தில் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள காய், கனி கடைகள், உழவா் சந்தை பகுதியில் மாடுகள் கூட்டமாக உள்ளன. இவைகள் ஒன்றோடு ஒன்று சண்டைபோட்டுக்கொண்டு வானகம் மீது மோதி விபத்துகள் நிகழ்கின்றன.
மேலும் இந்த மாடுகள் சண்டையால் காய், கனி சந்தைக்கு வரும் பெண்கள் அச்சப்படுகிறாா்கள். மேலும், நகரில் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. நாய்கள் வாகன ஓட்டிகளை துரத்துவதால், அடிக்கடி வாகன விபத்துகள் நிகழ்கின்றன. இதனால் செங்கம் நகரில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளையும், தெரு நாய்களையும் பிடித்து அகற்ற சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.