சீட்டு கம்பெனி நடத்தி லட்சக் கணக்கில் மோசடி: தம்பதிகள் கைது
தண்டராம்பட்டில் சீட்டு நடத்தி ரூ.68 லட்சம் மோசடி செய்த மளிகை கடைக்காரரையும், அவரது மனைவியையும் போலீசார் கைது செய்தனர்.;
தண்டராம்பட்டில் சீட்டு நடத்தி ரூ.68 லட்சம் மோசடி செய்த மளிகை கடைக்காரரையும், அவரது மனைவியையும் போலீசார் கைது செய்தனர்.
தண்டராம்பட்டு தாலுகா எடத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவருக்கும் தென்முடியனூர் கிராமத்தில் மளிகை கடை நடத்தி வந்த ரவிச்சந்திரன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போது ரவிச்சந்திரன் தானும், தனது மனைவி கல்பனாவும் இணைந்து கடந்த 20 ஆண்டுகளாக தீபாவளி சீட்டு, பொங்கல் சீட்டு, தள்ளு சீட்டு போன்ற சீட்டுகளை நடத்தி வருவதாகவும், தன்னிடம் சீட்டு கட்டி பல நபர்கள் பயனடைந்து உள்ளதாகவும் சுந்தரமூர்த்தியிடம் கூறியுள்ளார்.
பின்னர் பண்டிகை நாட்கள் முடிந்து பல நாட்கள் ஆகியும் தனக்கு சேர வேண்டிய சீட்டு தொகை மற்றும் பரிசு பொருட்களை தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். மேலும் ரவிச்சந்திரனை அவரால் தொடர்பு கொள்ள முடியாமல் போனதாக தெரிகிறது.
இதுகுறித்து சுந்தரமூர்த்தி விசாரித்ததில் ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோர் பல பேரிடம் கோடி கணக்கில் பணத்தை வசூல் செய்துவிட்டு கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் தேதி முதல் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது.
12.12.2022 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ரவிச்சந்திரன் மற்றும் கல்பனா ஆகியோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு பணத்தை மீட்டு தருமாறு சுந்தரமூர்த்தி புகார் அளித்திருந்தார்.
இதை எடுத்து மாவட்ட கால்வல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தலிங்கம் மேற்பார்வையில் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் கவிதா வழக்கு பதிவு செய்து நடத்தி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருவது தெரிய வந்தது இதை எடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் நேற்று கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் விசாரணை செய்ததில் சுமார் 1,550 பேரை சிறுசேமிப்பு திட்டத்தில் இணைத்து அதன் மூலம் கிடைத்த ரூ.68 லட்சத்தை அதிக லாபத்திற்காக வேறு நபர்களிடம் சேமிப்பு திட்டத்தில் இணைத்து பணம் செலுத்தியதாலும், தனது பிள்ளைகளின் படிப்பு செலவிற்காகவும் மற்றும் தனது சொந்த செலவிற்காகவும் அப்பணத்தை செலவு செய்து விட்டதால் எங்களிடம் சீட்டு கட்டியவர்களுக்கு எங்களால் பணத்தை திருப்பி தர முடியாமல் திருப்பூருக்கு தப்பி சென்றதாக கூறினர்.
மேலும் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கவிதா ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோரை திருவண்ணாமலை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1 , முன் ஆஜர் செய்து மாஜிஸ்ட்ரேட் உத்தரவின் பேரில் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.