திமுக முன்னாள் எம்பி மறைவு, அமைச்சர் நேரில் அஞ்சலி
திருவண்ணாமலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடலுக்கு அமைச்சர் வேலு அஞ்சலி செலுத்தினார்.;
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால் (பைல் படம்)
திருவண்ணாமலை தொகுதி திமுக முன்னாள் எம்பியும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவருமான த.வேணுகோபால்(88), கடந்த ஒரு மாதமாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், நேற்று பகல் 2.30 மணியளவில், அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டி கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார்.
இவர் 1977 மற்றும் 1980ம் ஆண்டுகளில் தண்டராம்பட்டு தொகுதியில் திமுக எம்எல்ஏவாக இருந்தார். 1996, 1998, 1999, 2004ம் ஆண்டுகளில் திருப்பத்தூர் தொகுதி எம்பியாகவும், 2009ம் ஆண்டு திருவண்ணாமலை தொகுதி எம்பியாகவும் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்று மக்கள் பணியாற்றினார்.
தொகுதி மறுசீரமைப்பில் திருப்பத்தூர் எம்.பி தொகுதி நீக்கப்பட்டது. கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தான் திருவண்ணாமலை தொகுதி உருவானது.
அப்போது திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேணுகோபால் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரை சுமார் ஒரு லட்சத்து 48 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2009 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டிலேயே மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர் மறைந்த வேணுகோபால் ஆவார்.
இவர் ஒன்றிய பெருந்தலைவராக பதவி வகித்த காலத்தில் திருவண்ணாமலை ஒன்றியத்தில் கிராமங்களுக்கு தார் சாலைகள், கிராமங்களுக்கு இடையிலான இணைப்பு சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளோடு கிராம சாலைகள் இணைப்பு, கிராமங்களில் பள்ளி கட்டிடங்கள் என பலவற்றை கொண்டு வந்தார்.
அனைத்து கட்சி உறுப்பினர்களிடமும் அன்பாக பழகக் கூடியவர். இவருக்கு திமுக கழகத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான தந்தை பெரியார் விருதுநை திமுக கழகம் வழங்கி கௌரவித்தது.
திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, கீழ்பெண்ணாத்தூர், செங்கம் ,திருவண்ணாமலை தொகுதிகளில் 80 சதவீத கிராமங்களில் தனது எம்எல்ஏ நிதி எம்பி நிதியில் இருந்து நிதி ஒதுக்கி தந்து பணிகள் நடைபெற்றது கிராமங்களில் உள்ள கல்வெட்டுகள் மூலமாக இன்றும் காண முடியும்.
இவரது உடலுக்கு அமைச்சர்காள் எ.வ.வேலு, செஞ்சி மஸ்தான், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்பி அண்ணாதுரை,மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன், திமுக மாநில மருத்துவரணி நிா்வாகி எ.வ.வே.கம்பன், எம்எல்ஏக்கள் கிரி, சரவணன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன் உட்பட ஏராளமானோர் நேற்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். த.வேணுகோபால் உடல் நல்லடக்கம் இன்று பகல் 1 மணிக்கு காட்டாம்பூண்டி கிராமத்தில் உள்ள மயானத்தில் நடைபெற உள்ளது.
கழக நிகழ்ச்சிகள் ரத்து
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பொதுப்பணித்துறை அமைச்சருமான வேலு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அவை தலைவரும் நாடாளுமன்ற சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் கழக மூத்த முன்னோடியுமான வேணுகோபால் உடல் நலம் குன்றியும் முதுமையின் காரணமாக நம்மை விட்டு பிரிந்து விட்டார். அன்னாரின் மறைவையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் பிப்ரவரி 15 16 17 ஆகிய மூன்று நாட்கள் அனைத்து கழக நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது. கழகக் கொடி கம்பங்களில் கொடியினை அரைகம்பத்தில் பறக்க விட கேட்டுக்கொள்கிறேன் என தனது அறிக்கையில் அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார்.