ஏரியில் மீன்களை வளர்க்க அனுமதிக்கக்கோரி மீனவர்கள் சாலை மறியல்
தண்டராம்பட்டு அருகே ஏரியில் மீன்களை வளர்க்க அனுமதிக்கக்கோரி மீன்குஞ்சுகளை ரோட்டில் கொட்டி மீனவர்கள் சாலை மறியல்
தண்டராம்பட்டை அடுத்த ராதாபுரம் ஊராட்சியில் 250 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. கடந்த ஜனவரி மாதம் உதவி பொறியாளர் ஹரிஹரன் தலைமையில் மீன் வளர்ப்பு குத்தகை ஏலம் விடப்பட்டது. இதனை ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் ரூ.75 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார்.
இதையடுத்து அவர், மீனவர்களுடன் ஏரியில் மீன் வளர்ப்பதற்காக மீன்குஞ்சுகளை விட சென்றபோது, ராதாபுரம் கிராம பொதுமக்கள், மீன் குஞ்சுகளை வளர்ப்பதற்காக ஏரியில் விடக்கூடாது எனக் கூறி தடுத்தனர்.கந்தசாமி, மீனவர்களுடன் மீன் குஞ்சுகளை ஏரியில் விடுவதற்காக சென்றபோது, அவரை தடுத்த பொதுமக்கள் இது, பொதுமக்களுக்கு உரிய ஏரி, பொதுப்பணித்துறை ஏலம் விட்டதை ஏற்க முடியாது. எனவே அனைத்துச் சமூகத்தைச் சேர்ந்த பெரியவர்கள் முன்னிலையில் ஏலம் விட வேண்டும். அதன் பின்னரே மீன்குஞ்சுகளை ஏரியில் விட வேண்டும், எனக் கூறி மீன் குஞ்சுகளை ஏற்றி வந்த வண்டியை மறித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஏரியை ஏலம் எடுத்த கந்தசாமி மற்றும் உடன் சென்ற மீனவர்கள் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் நாங்கள் ஏலம் எடுத்து, அதற்குண்டான பணத்தை பொதுப்பணித் துறையிடம் செலுத்தி உள்ளோம்.எங்களை ஏரியில் மீன் குஞ்சுகளை விட அனுமதிக்க வேண்டும், எனக்கோரி ராதாபுரம் பஸ் நிறுத்தத்தில் மீன் குஞ்சுகளை ரோட்டில் கொட்டி திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த தண்டராம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் சிவலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் அலமேலு குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களை சமரசம் செய்தனர். அதைத்தொடர்ந்து ஒரு மணிநேரத்துக்கு பிறகு சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
சாலை மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை தண்டராம்பட்டு தாலுகா அலுவலகத்துக்கு வரவழைத்து தாசில்தார் தலைமையில் மாலை 5 மணிக்கு சமாதானக் கூட்டம் நடந்தது. ஆனால் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனை தொடர்ந்து திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெறும் எனக் கூறி இருதரப்பினரையும் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.