தீயை அணைக்க சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர்..!
வைக்கோலில் பற்றி எரிந்த தீயை அணைப்பதற்கு புத்திசாலித்தனமாக மினி லாரியை ஏரிக்குள் இறக்கிய ஓட்டுநர்.;
தீ பிடித்து எரிந்ததால் வைக்கோல் ஏற்றி வந்த மினி லாரியை சாமர்த்தியமாக ஏரிக்குள் விட்டு விபத்தை தவிர்த்தார் ஓட்டுநர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கோலந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் விவசாயி ஆவார். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நெல் பயிரை அறுவடை செய்திருந்தனர். அந்த நிலத்திலிருந்து வைக்கோலை ஏற்றிச் செல்வதற்காக தர்மபுரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியில் இருந்து வேன் ஓட்டுநர் வந்திருந்தார்.
அவர் இன்று வைக்கோலை மினி லாரியில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது விவசாய நிலத்தின் அருகில் தாழ்வாக சென்ற மின்சார கம்பி வைக்கோலின் மீது உரசியது.
மின்கம்பி வைக்கோல் மீது உரசியதால் வண்டியிலிருந்த வைக்கோல் தீ பற்றி எரியத் தொடங்கியது. இதனை கவனித்த பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் வைக்கோல் தீ முழுவதும் பரவி எரிய தொடங்கியது.
இதனை கவனித்த ஓட்டுநர், அந்த இக்கட்டான சூழ்நிலையில், சாமர்த்தியமாக செயல்பட்ட அவர் அரை கிலோமீட்டர் தூரம் ஓட்டிச் சென்று, ஏரி தண்ணீரில் மினி லாரியை இறக்கிவிட்டு, உயிர் தப்பினார். அங்கிருந்த கிராம மக்கள் ஒன்று சேர்ந்து உதவி செய்து, ஜேசிபி இயந்திரம் மூலம் ஏரியில் இறங்கிய மினி லாரியை அப்புறப்படுத்தினர்.
சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வைக்கோல் பற்றி எரிந்த நிலையில் மினி லாரியை சாமர்த்தியமாக ஓட்டிச் சென்றதால், பெரிய சேதாரம் தவிர்க்கப்பட்டது. ஓட்டுநர், வாகனத்தை ஏரி தண்ணீரில் இறக்கிய போது, எரிந்துக் கொண்டிருந்த வைக்கோலில் நீர்பட்டதால் லாரிபற்றி எரியாமல் காப்பாற்றப்பட்டது. பெரும் விபத்தை தவிர்ப்பதற்காக இக்கட்டான சூழ்நிலையில், சாமர்த்தியமாக செயல்பட்ட டிரைவருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.