முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் நகை பணம் திருட்டு
திருவண்ணாமலை அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் மர்ம நபர்கள் நகை பணம் திருடி சென்றது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.;
பைல் படம்
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் மர்மநபர்கள் 30 பவுன் நகையை திருடிச்சென்றுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் பறையம்பட்டு சாலையை சேர்ந்தவர் பூமிநாதன், முன்னாள் ராணுவ வீரரான இவர் தற்போது வாழவச்சனூர் அரசு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
நேற்று காலை பூமிநாதன் வழக்கம்போல் பணிக்கு சென்று விட்டார். அவரது மனைவி செல்வி, வீட்டை பூட்டிவிட்டு விவசாய நிலத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை அவரது குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன் பக்க கதவு உள் பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அவர்கள் பின்பக்கம் சென்று பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்றபோது பீரோ உடைக்கப்பட்டு துணிமணிகள் மற்றும் பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதிர்ச்சியடைந்த பூமிநாதன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது 30 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப்பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து வாணாபுரம் போலீசாருக்கு பூமிநாதன் தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிராமிய துணை காவல் கண்காணிப்பாளர் முருகன் , இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் , சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன் , சுந்தர்ராஜன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர் . மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடையங்களை சேகரித்தனர்.
வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று முன்பக்க கதவை உள்பக்கம் பூட்டிவிட்டு நகை பணத்தை திருடி விட்டு தப்பியது தெரிய வந்துள்ளது.திருடு போன நகையின் மொத்த மதிப்பு ரூபாய் 12 லட்சம் என்று கூறப்படுகிறது . இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.