தபால் ஓட்டை மாற்றி போட முயற்சி: உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
தபால் வாக்குப்பதிவில் அதிமுக ஓட்டை திமுகவுக்கு போட்டதால் தேர்தல் உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 80 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் நேரில் சென்று தபால் வாக்குகள் பெறும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் செங்கம் தொகுதி சின்ன கோலாபாடி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக பால்வளத் துறை அமைச்சர் ராமச்சந்திரனின் அக்கா குப்பம்மாள் மகன் மனநிலை குன்றிய மாற்றுத்திறனாளி கார்த்திக்கின் தபால் வாக்கு பெறுவதற்காக அதிகாரிகள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது கார்த்திக் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி செய்கையில் காட்டியதாக சொல்லப்படுகிறது. அதிகாரிகளுடன் வந்த உதவியாளர் சரவணன் என்பவர் கார்த்திக்கிடம் இருந்த தபால் ஓட்டை பிடுங்கி உதயசூரியன் சின்னத்திற்கு டிக் செய்ததாக சொல்லப்படுகிறது. இதனைப் பார்த்த கார்த்திக்கின் தாய் குப்பம்மாள் உதவியாளர் சரவணனிடம் என் மகன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கச் சொல்லியும் நீங்கள் எப்படி உதயசூரியன் சின்னத்திற்கு டிக் செய்தீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் ஒன்று கூடியுள்ளனர் நிலைமையை உணர்ந்த அதிகாரிகள் அங்கிருந்து அவசர அவசரமாக கிளம்பியதாக சொல்லப்படுகிறது.
பெரியகோலாபாடி கிராம உதவியாளர் அலுவலகம் எதிரில் பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் அதிகாரிகளை மடக்கிப் பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த தேர்தல் அதிகாரி மற்றும் செங்கம் வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கூட்டம் அதிகமாக கூடவே அங்கிருந்து சரவணனை வேறு இடத்திற்கு காவல்துறையினர் அழைத்துச் செல்ல முயற்சி செய்தனர்.
அப்போது அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். மேலும் ஒரு சிலர் காவல்துறை வாகனத்தில் இருந்த சரவணனை தாக்க முயற்சி செய்தனர். உடனடியாக போலீசார் தலையிட்டு பொதுமக்கள் மற்றும் அதிமுகவினரை சமாதானப்படுத்தி அங்கிருந்து போலீசார் சரவணனை அழைத்து சென்றனர்.
அங்கு முற்றுகையிட்ட பொதுமக்கள் செங்கம் தொகுதிக்கு உட்பட்ட தபால் வாக்கு பதிவுகளை மறு வாக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். தவறு செய்த அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று கோரிக்கையும் தேர்தல் அதிகாரிகள் இடத்தில் முன்வைத்தனர்
மேலும், இது தொடர்பாக உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.