நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திராவிட கழகத்தினர் வாகன பேரணி

திருவண்ணாமலையில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திராவிட கழகத்தினர் வாகன பேரணி மேற்கொண்டனர்

Update: 2024-07-15 03:59 GMT

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி வாகன பரப்புரை மேற்கொண்ட திராவிட கழகத்தினர்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திராவிட கழகத்தினர் வாகன பேரணி பரப்புரை மேற்கொண்டனர். பரப்புரையின் போது பேசிய திராவிட கட்சியின் மாநில துணை பொது செயலாளர் மதிவதனி, நீட் தேர்வு என்பது பாமரர்களுக்கு இல்லை பணம் உள்ளவர்களுக்காக மத்திய அரசு நடத்தி வருகிறது. 12 ஆம் வகுப்பில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்தாலும் அவர்கள் மருத்துவர் ஆக முடியாது, நீட் தேர்வுக்கென தனியாக 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை தொகை செலுத்தி தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்தால் தான் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவர் ஆக முடியும் என்று மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.

அவரை தொடர்ந்து பேசிய செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் மு.பெ. கிரி, கறுப்பு பணத்தை வெள்ளையாக்க மட்டும் தான் இந்த நீட் தேர்வு உதவியாக உள்ளது என பகிரங்க குற்றம் சாட்டினர். செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற வாகன பரப்புரையில் இந்தியா கூட்டணி கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

திருவண்ணாமலையில் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகன பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கு.பிச்சாண்டி, மதிவதனி, எ.வ.வே. கம்பன் சிறப்புரையாற்றினர்.

திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி, திருவண்ணாமலைமாவட்ட திராவிடர் கழக இளைஞர் அணி மற்றும் திராவிட மாணவர் சங்கம் சார்பில் இரு சக்கர வாகன பரப்புரை பயணத்தை வரவேற்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தி.க செயலாளர் அண்ணா தாசன் முன்னிலை வகித்தனர். நகர திமுக செயலாளர் கார்த்தி வேல்மாறன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். முன்னதாக இருசக்கர வாகன பரப்புரையில் கலந்து கொண்டு வருகை தந்தவர்களுக்கு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி சால்வை அணிவித்து பாராட்டினார் .

பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு,  சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி கருத்துரை வழங்கி உரையாற்றினார். தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் மதிவதனி, கழக மருத்துவரணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், திராவிட கழக நிர்வாகிகள், பகுத்தறிவாளர் கழகம் ,விடுதலை வாசகர் வட்டம் உள்ளிட்ட நிர்வாகிகள், திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News