திமுக வேட்பாளர் அறிமுகம், செயல்வீரர்கள் கூட்டம்
திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பில் திமுக வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ் தலைமை வகித்தார். திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி முன்னிலை வகித்தார். நகர செயலாளர் அன்பழகன் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் அமைச்சர் எ.வ. வேலு, கலந்துகொண்டு திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது;
ஜனநாயகத்திற்கு ஆபத்து வந்துள்ளது. இந்த தேர்தல் யார் வரக்கூடாது என்பதற்கான தேர்தல், பாசிசத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல்.
சமூக நீதிக்கும் மனுநீதிக்கும் இடையே நடைபெறும் தேர்தல். இந்தியாவில் உயர்ந்த பதவியில் இருக்கும் குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தை திறக்கவில்லை, ராமர் கோவிலுக்கும் செல்லவில்லை, இதுதான் மனுநீதி. ஆனால் ஆதி திராவிடர்களும் கோவில் அறங்காவலர் குழுவில் இடம் பெறலாம் என கூறியவர் கலைஞர் இது சமூக நீதி ஆகும்.
தமிழகத்தில் சமுகநீதி மற்றும் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது. மகளிா் உரிமைத்தொகை, இலவச பேருந்து, புதுமைப் பெண் என எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியுள்ளது.
பாஜக இயக்கம் எந்த காலத்திலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது. கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது.
பாஜக அரசு மூன்றாவது முறையாக வந்தால் ஜிஎஸ்டி உயர்ந்துவிடும் .
சமையல் எரிவாயு விலை அதிக அளவில் உயர்த்தப்படும், ஆகையால் இந்த முறை நாம் வெற்றி பெற்ற அனைவரும் சுறுசுறுப்பாக வேலை செய்யுங்கள் என திமுகவினரை கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சூரியகுமார், ஒன்றிய செயலாளர்கள் ,மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெங்கடேஷ் ,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் ,நெசவாளர் அணி அமைப்பாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், நகர செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.