தீபாவளி வசூல்: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
Anti Corruption -ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
Anti Corruption -தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு அதிகாரிகள் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக வந்த புகார்களின் அடிப்படையில் 30க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சோதனைகளில் இதுவரை, கணக்கில் வராத லட்சக்கணக்கான ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஏராளமான பரிசுப் பொருட்கள், சால்வைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளி நெருங்கும் நேரத்தில், அரசு அலுவலகங்களில் நடைபெற்றுள்ள இந்த அதிரடி ரெய்டு, அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அதில், பத்திரப்பதிவு, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்துறை, தொழில்துறை, வட்டார போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை, வணிகவரித்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், தமிழ்நாடு நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகர ஊரமைப்புத்துறை, வேளாண்மைத்துறை, மதுபானம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை, மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆகிய 16 துறைகளில் உள்ள 46 அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.இந்த சோதனையில் ஒரு கோடியே 12 லட்சத்து 57 ஆயிரத்து 803 ரூபாய் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது .
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனை செய்தனர். இதில் கணக்கில் வராத ரூபாய் 1.50 லட்சம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி தலைமையில் இந்த ஒன்றியத்துக்கு உட்பட்ட 44 கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
அப்போது சுமார் 6 மணி அளவில் திருவண்ணாமலை ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு துணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மைதிலி உள்பட 10 பேர் கொண்ட குழுவினர் திடீரென அந்த கூட்ட அரங்குக்குள் சென்று சோதனை நடத்தினர் .
அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரூபாய் 1.50 லட்சம் ரொக்கம் , பரிசு பொருட்கள் , சால்வைகள் உ ள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் இந்த பணம் யாருடையது எதற்காக இந்த கூட்டு அரங்குக்கு கொண்டுவரப்பட்டது என்பது குறித்து விசாரித்தனர். பின்னர் ஊராட்சி மன்ற தலைவர்கள் அனைவரும் கூட்ட அரங்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி உள்பட அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2