மான் கறி சமைத்த 2 பேருக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் விதிப்பு..!
தண்டராம்பட்டு அருகே வனத்துறையினர் சோதனையின்போது, மான் கறி சமைத்த 2 பேருக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் விதிப்பு;
தண்டராம்பட்டு அருகே வனத்துறையினர் சோதனையின்போது, மான் கறி சமைத்த 2 பேருக்கு தலா ரூ. 90 ஆயிரம் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த மோத்தக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் வன விலங்கை வேட்டையாடி சமைத்துக் கொண்டிருப்பதாக மாவட்ட வன அலுவலர் அருண்லாலுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தானிப்பாடி வன சரக அலுவலர் செல்வம், வனவர் குமார், வனகப்பாளர்கள் பாலமுருகன், ராம்குமார், செல்வராஜ், அரவிந்த் ஆகியோர் அண்ணா நகர் பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மறைவான இடத்தில், அதேபகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சிலம்பரசன், முருகன் ஆகிய இருவரும் மான் கறி சமைத்துக்கொண்டிருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் பிடித்து தலா ₹45 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், அவர்கள் சமைத்த கறியை பறிமுதல் செய்து அழித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடைக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை: மளிகை வியாபாரிக்கு வலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் மளிகை கடைக்குச் சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வியாபாரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 14 வயது மகள், அவரது தாத்தா வீட்டில் தங்கி, 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியை, அவரது தாத்தா வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வர மளிகை கடைக்கு அனுப்புவது வழக்கம்.
அப்போது கடையின் உரிமையாளர் ஜானி, அடிக்கடி சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு, பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமி அவரது தாத்தாவிடம் தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்தவர், அங்குள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் மளிகை கடை உரிமையாளர் ஜானி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.