உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்
உடல் உறுப்புகள் தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கானோருக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகிறது. மூளைச்சாவு அடைந்த துயர சூழ்நிலையிலும், உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால் தான் இந்த சாதனை சாத்தியமாகி உள்ளது.
உடல் உறுப்புகளை தானமாக வழங்கி பல உயிர்களை காப்போரின் தியாகத்தினை போற்றிடும் வகையில் அவர்களது உடலுக்கு இறுதி சடங்குகள் அரசு மரியாதைகளுடன் மேற்கொள்ளப்படும் என கடந்த ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் செங்கம் வட்டம் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் அல்லி யந்தல் ஊராட்சியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் செங்கம் சாலை பாச்சல் ஊராட்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த மூன்றாம் தேதி உயிரிழந்தார்.
அவரது குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் செய்ய சம்மதித்து அவரது உடல் உறுப்பு தானமாக பெறப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து அரசின் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியபாஸ்கர பாண்டியன் அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்
இந்நிகழ்வில் வட்டாட்சியர்கள், மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், அரசு அலுவலர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் , பொதுமக்கள் உடனிருந்தனர்.