புதுப்பாளையம் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2021-07-24 16:09 GMT

விவசாயி பெருமாளிடம் வசதிகள் குறித்து விசாரித்த மாவட்ட ஆட்சியர்.

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 2.19 கொடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் காஞ்சி ஊராட்சி காமராஜர் நகரில் 183 வீடுகளுக்கு ரூபாய் 8.50 லட்சம் மதிப்பீட்டில் தனிநபர் இல்லங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, நாகாபாடி கிராமத்தில் தூய்மை பாரத இயக்கத்தின் தனிநபர் இல்ல கழிப்பறை திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்டும் பணிகளை பார்வையிட்டார். பின்னர், வீரனந்தால் கிராமத்தில் தனது 2.70 ஏக்கர் சொந்த நிலத்தில் வேர்க் கடலை,  கரும்பு உள்ளிட்ட விவசாயம் செய்து வரும் விவசாயி பெருமாள் என்பவரிடம் மாவட்ட ஆட்சியர் பேசும்போது சிறு குறு விவசாயி சான்று மற்றும் பாரத பிரதமரின் கிசான் திட்டம் வழங்கப்படுவது குறித்து கேட்டறிந்தார்.

அப்போது அந்த விவசாயி தனக்கு எந்த சான்றும் இல்லை எவ்வித பயனும் தான் பெறவில்லை என தெரிவித்தார். உடனடியாக மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் விவசாயி பெருமாளுக்கு சிறு குறு விவசாயி சான்றிதழ் வழங்குவதற்கும் பாரத பிரதமரின் கிசான் திட்டத்தின் மூலம் வருடத்திற்கு ரூ. 6000 கிடைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். 

ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர் பிரதாப்,  செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News