அஞ்சல் வாக்கு செலுத்தும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

செங்கத்தில் அஞ்சல் வாக்கு செலுத்தும் மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2024-04-08 01:22 GMT

தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் பேசிய மாவட்ட கலெக்டர் மற்றும் பொது தேர்தல் பார்வையாளர்.

தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நேற்று நடைபெற்றது.

முன்னதாக முதல் கட்ட பயிற்சி நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட பயிற்சியை தேர்தல் ஆணையம் சார்பில் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ராமகிருஷ்ணா பள்ளியில் நாடாளுமன்றத் தேர்தல் செங்கம் சட்டமன்றத் தொகுதி 323 வாக்குச்சாவடி மையங்களுக்கு சுமார் 1300 அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் வட்டாட்சியர் முருகன் தலைமையில் நடைபெற்றது.

மேலும் இந்த இரண்டாம் கட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நடந்த பயிற்சி வகுப்பினை தேர்தல் பொது பார்வையாளர் மகாவீர் பிரசாத் மீனா மற்றும் திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் திடீரென ஆய்வுக்கு வந்தனர்.

அலுவலர்கள் இல்லாததால் அதிர்ச்சி

தேர்தல் பொது பார்வையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் திடீராய்வுக்கு வந்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பை பார்வையிட்ட போது அங்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களுடைய பயிற்சி வகுப்பில் இல்லாமல் வெளியில் சென்று இருந்தனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆட்சியர், வாக்குச்சாவடி அலுவலர்கள் அனைவரும் தங்களுடைய பயிற்சி அறைக்கு செல்லுமாறும்,  தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்கள் இதுபோன்று கால தாமதமாக பயிற்சி அறைக்குள் வந்தாலும் , ஆசிரியர்கள் பயிற்சி அறையில் இருக்கும் போது மாணவர்கள் வெளியேறினாலும் நீங்கள் பொறுத்துக் கொள்வீர்களா என கேள்வி எழுப்பி அனைவரும் பயிற்சி அறைக்குள் செல்லுமாறு அறிவுறுத்தினார்.  பின்னர் பயிற்சி அறைக்கு சென்று பயிற்சி வகுப்பினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி மையத்தில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு அலுவலர்களுக்கான பணிகள் குறித்து எடுத்துரைத்து பேசினார்.

இந்நிகழ்வில் வேட்பாளரின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், வட்டாட்சியர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், ஆசிரியர்கள், நேர்முக உதவியாளர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள், துணை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர். 

Similar News