செங்கம் ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
செங்கம் ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் ஆணைகள் எம்எல்ஏ வழங்கினார்.;
செங்கம் அருகே நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் கலந்து கொண்டசெங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி அரசு அதிகாரிகள் கடமை உணர்ச்சியோடு மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த, ஜவ்வாதுமலை ஒன்றியம், புலியூர் வனத்துறை நடுநிலைப்பள்ளியில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தி.மலை மாவட்ட கூடுதல் ஆட்சியர் குமரன், தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், வட்டாட்சியர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் மேல்பட்டு, புலியூர், கல்லாத்தூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் மக்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் வருவா ய்த்துறை கால்நடைத்துறை மின்சாரத்துறை வட்டார வளர்ச்சி துறை காவல் துறை வனத்துறை கூட்டுறவுத்துறை மருத்துவத்துறை உள்ளிட்ட 23 துறைகள் முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
முகாமில் கலந்து கொண்ட செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி பயனாளிகளுக்கு பட்டா மாற்றம். கணினி பட்டா திருத்தம், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கூட்டுறவுத்துறை மூலம் கறவை மாடு கடனுதவி பெறப்படும் திட்டங்களுக்கு ஆணைகள் வழங்கி பேசியதாவது :
தி.மு.க ஆட்சி தமிழ்நாட்டில் எப்பொழுது எல்லாம், ஆட்சிக்கு வருகிறதோ, அப்பொழுது எல்லாம், அனைத்து தரப்பு மக்களுக்கும் முழுமையாக சென்று அடையக்கூடிய திட்டங்களை அறிவித்து, முழுமையாக நிறைவேற்றி வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சரின் இன்னுயிர் காக்கும் திட்டம், பெண்களுக்கு மாதம்தோறும் உரிமைத் தொகை திட்டம், கட்டணமில்லா பேருந்து வசதி என பல்வேறு சிறப்பு திட்டங்கள் மூலம் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தையும், அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது, மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். மனுவில் ஒரு சில குறைகள் இருப்பினும், அந்த குறைகளை அதிகாரிகளே தீர்த்து வைத்து, மக்களின் குறைகளை முழுமையாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் , அரசு அதிகாரிகள் தங்களுக்கான பணிகளை செய்து , முதல்வரின் கனவுகளை நிறைவேற்றி, பொது மக்களின் கோரிக்கையை முழுமையாக பூர்த்தி செய்ய அரசு அதிகாரிகள் முழுமனதோடு, கடமைக்காக பணி செய்கிறோம் என்று நினைக்காமல், முழு அர்ப்பணிப்போடு அதிகாரிகள் பணியாற்றிட வேண்டும் என கிரி எம்எல்ஏ பேசினார்.
முகாமில் ஜவ்வாதுமலை தெற்கு ஒன்றிய செயலாளர் சிவசேமன், செங்கம் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் அன்பழகன், சிவானந்தம் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செந்தில்குமார், சகுந்தலா ராமஜெயம், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைத்து துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.