மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக அண்ணன் கைது

பள்ளி மாணவி கிணற்றில் குதித்து இறந்த சம்பவத்தில், அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அண்ணனை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-03-06 09:17 GMT

திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள்:

தண்டராம்பட்டு அருகே பள்ளி மாணவி கிணற்றில் குதித்து இறந்த சம்பவத்தில், அவரை தற்கொலைக்கு தூண்டிய அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள தென்கரும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. அவரது மனைவி தரணி. இவர்களுக்கு 2 மகள்கள். பிரபு பெங்களூருவில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மூத்த மகள் பிரியதர்ஷினி (வயது 16) வாணாபுரத்தில் உள்ள  ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 3ம் தேதி மாணவி தனது ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்ததை, அவரது பெரியப்பா மகன் பிரசாத் (26) என்பவர் பார்த்து கண்டித்துள்ளார்.  இதனால் மனமுடைந்த மாணவி அதே பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில், மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக பிரசாத் மீது வாணாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். இந்நிலையில், தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் பிரசாத்  சரணடைந்தார். அவரை இன்ஸ்பெக்டர் தனலட்சுமி கைது செய்து சிறையில் அடைத்தார்.

ஆரணியில் பர்னீச்சர் கடையில் தீ விபத்து:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் கார்த்திகேயன் ரோட்டில் சக்திவேல் (வயது 55) என்பவர் பர்னீச்சர் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடையின் மேல் பகுதியில் உள்ள தகடு பற்றவைப்பதற்காக வெல்டிங் செய்த போது அதில் இருந்து தீப்பொறி பறந்து அங்கிருந்த பொருட்களில் பட்டு தீப்பிடித்து எரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர்.

வேட்டவலத்தில் இருசக்கர வாகன் மோதி மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு:

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பெரியார் தெருவை சேர்ந்தவர் முருகன். அவரது தாய் கஸ்தூரி (வயது 70). இவர், வேட்டவலம் கடை வீதியில் மளிகை பொருட்கள் வாங்கிக்கொண்டு நடந்து வந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் திடீரென கஸ்தூரி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கஸ்தூரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News