செங்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு மருத்துவரை நியமிக்க கோரி பாஜக ஆர்ப்பாட்டம்
செங்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், உடற்கூறு ஆய்வு மருத்துவர் நியமிக்க கோரி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செங்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், உடற்கூறு ஆய்வு மருத்துவர் நியமிக்க வேண்டும் என்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசு தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் இல்லை. நோயாளிகள் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுதாதார நிலையம், தனியாா் மருத்துவமனைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த மருத்துவமனையில் விபத்தில் அடிபட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க அதற்கான சிறப்பு மருத்துவா்கள் இல்லை. இதனால், விபத்துக்குள்ளானவா்களுக்கு இங்கு முதலுவதவி சிகிச்சை அளித்து, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கின்றனா். அப்போது, விபத்தில் காயமடைந்தவா் போகும் வழியில் இறக்கும் நிலை உள்ளது.
அதேபோல், செங்கம் வட்டத்தில் விபத்தில் மரணம் அடைந்தவா் உடலை 40 கி.மீ. தொலைவில் உள்ள திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வு செய்ய அனுப்பிவைக்கிறாா்கள்.
கூறாய்வு முடிந்து உடலை பெற்று வீட்டுக்கு எடுத்து வர இரண்டு நாள்கள் ஆகிறது. மேலும் ஆம்புலன்ஸ் செலவு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை ஆகிறது.
இதனால், செங்கம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்கள், உடல்கூறாய்வு மருத்துவா்களை நியமனம் செய்யவேண்டும் எனக் கோரி பாஜக சாா்பில் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளா்களாக இளைஞரணி மாநிலச் செயலா் தினேஷ்குமாா், மாநிலத் தலைவா் ரமேஷ்சிவா ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.
செங்கம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 44 கிராமங்களுக்கு தலைமை மருத்துவமனையாக இயங்கி வரும் செங்கம் அரசு பொது மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைக்காக வந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
எனவே உடனடியாக கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். மேலும் செங்கம் பகுதியில் விபத்துகளில் உயிரிழக்கும் நபர்களை உடற்கூறு ஆய்வு செய்யக்கூட செங்கம் மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை. இறந்தவர்களின் பாவம் திமுக அரசை சும்மா விடாது. எனவே உடனடியாக உடற்கூறு மருத்துவர் செங்கம் மருத்துவமனைக்கு நியமிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இளைஞரணி தலைவர் ரமேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் ஜீவானந்தம், துணைத் தலைவர் சேகர், இளைஞர் அணி மாநில பொது செயலாளர் நவீன் குமார், மாநிலத் துணைத் தலைவர்கள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் இளைஞர் அணி உறுப்பினர்கள் விவசாய பிரிவு, கல்வியாளர் பிரிவு, மகளிர் அணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.