செங்கம் அருகே கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு முகாம்
செங்கம் அருகே கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.;
பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகங்களை வழங்கிய எம்எல்ஏ கிரி.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம் பட்டு தோப்பூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் வட்டார மருத்துவ அலுவலர் சிலம்பரசன், ஊராட்சி மன்ற தலைவர் துணைவன் ஆகியோர் முன்னிலையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி மருத்துவ முகாமை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
அப்போது சட்டமன்ற உறுப்பினர் கிரி பேசுகையில், இந்த முகாமில் தனி நபர் ஆரோக்கியத்தை உருவாக்குதல் மற்றும் மக்கள் நல்வாழ்வை மேம்படுத்துதல் போன்றவை குறிக்கோளாக கொண்டு தமிழ்நாடு அரசு மூலம் இந்த சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த முகாமில் பல், காது ,மூக்கு, தொண்டை ,வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீரிழிவு நோய்கள், காச நோய்கள் ,இருதயம் சார்ந்த நோய்கள், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நோய், எலும்பு மூட்டு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை மற்றும் சித்த மருத்துவ சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது.
திமுக ஆட்சியில் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு உயரிய சிகிச்சை பெற வேண்டும் என்ற நோக்கில் கிராமங்கள் தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு ஏழை எளிய மக்கள் சிறப்பு சிகிச்சை பெற்று வந்தனர் . கடந்த 10 ஆண்டு காலமாக அதிமுக ஆட்சியில் இந்த திட்டம் முறையாக நடைபெறவில்லை.
திமுக ஆட்சி எப்பொழுதெல்லாம் தமிழகத்தில் வருகிறதோ அப்போதெல்லாம் ஏழை எளிய மக்கள் அடித்தட்டு மக்கள் பயன்பெறக்கூடிய திட்டங்கள் அறிவித்து அனைத்து தரப்பு மக்களும் பயன் பெற்று வருவதாக சட்டமன்ற உறுப்பினர் கிரி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மருந்து மாத்திரைகள் அடங்கிய பெட்டகங்களை சட்டமன்ற உறுப்பினர் கிரி வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் மனோகரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செந்தில்குமார், ஒன்றிய துணை செயலாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.