செங்கம் அருகே அரசு பஸ் டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த பள்ளி மாணவன்
கத்தியை காட்டி பிளஸ்-2 மாணவர் கொலை மிரட்டல் விடுத்ததால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை குறுக்கே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே புதுப்பாளையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நேற்று மாலை அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது.
அந்தப் பேருந்து காஞ்சி வந்ததும் காஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஏற்றிச் செல்ல வழக்கம்போல் நிறுத்தினார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டின் கதவுகளை டிரைவர் சாத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கெங்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவன் அரசு பஸ் டிரைவரிடம் சென்று ஏன் படிக்கட்டின் கதவு திறக்காமல் மூடினாய் என்று கேட்டு ஆபாசமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது அந்த மாணவன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காட்டி கொலை செய்து விடுவதாக டிரைவரை மிரட்டி உள்ளர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பஸ் டிரைவர் பள்ளியின் அருகே உள்ள சாலையில் பஸ்சை குறுக்கே நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்த கடலாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரசு பஸ் டிரைவரை சமரசம் செய்தனர். பயணிகளிடமும் மாணவர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இது குறித்து கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பிளஸ் டூ படிக்கும் பள்ளி மாணவர் கத்தியை காட்டி மிரட்டியது பேருந்தை நிறுத்தி டிரைவர் போராட்டத்தில் ஈடுபட்டதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.