செங்கத்தில் லாரி ஓட்டுநர் அடித்து கொலை
செங்கத்தில் லாரி ஓட்டுநர் அடித்து கொலை செய்யப்பட்டார்.;
செங்கத்தில் வாத்து மேய்க்க வந்த இடத்தில் லாரி ஓட்டுநரை லாரி உரிமையாளர் அடித்து கொலை செய்து சடலத்தை செய்யாற்றில் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் லாரி உரிமையாளர் ஆவார். இவர் வாத்துக்களை வளர்த்து வெளிமாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறாராம். இவருக்கு சொந்தமான வாத்துக்களை திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் தோக்கவாடி, கொட்டகுளம், ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளில் மெய்ச்செழுக்கு வாக்குகளை விட்டு பராமரிப்பது வழக்கமாம்.
இந்த நிலையில் கடந்த எட்டாம் தேதி ஹரிஷ் லாரியை எடுத்துச் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த லாரி உரிமையாளர் ரமேஷ், மேகநாதன் ஆகியோர் கடந்த ஒன்பதாம் தேதி செங்கம் அடுத்த கடலாடி காவல் நிலையத்திற்கு சென்று அபராதம் செலுத்தி லாரியை மீட்டு வந்தனர்.
லாரியை எடுத்துச் சென்று விபத்து ஏற்படுத்தியதில் ஆத்திரத்தில் இருந்த லாரி உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் விபத்தை ஏற்படுத்திய ஹரிசை செங்கம் அடுத்த தோக்கவாடி ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ஹரிஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த லாரி உரிமையாளர் ரமேஷின் மகன் விஜயகுமரன் மற்றும் மேகநாதன் ஆகிய இருவரும் சேர்ந்து ஏரிக்கரை பகுதியில் ஹரிஷின் சடலத்தை புதைத்து விட்டு தலைமறைவாகிவிட்டனர்.
ஹரிசை தாக்கியதை வீடியோ எடுத்து வைத்திருந்த லாரி உரிமையாளர்கள் அந்த வீடியோவை தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோ பதிவு இறந்த ஹரீஷின் தந்தை பாஸ்கரனுக்கு கிடைத்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் நேற்று முன்தினம் செங்கம் காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரங்களுடன் புகார் மனு அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவாக இருந்த விஜயகுமார் மேகநாதன் ஆகியோரது செல்போன் எண்களை கண்காணித்து வந்தனர். இதில் இருவரும் இருக்கும் இடம் தெரியவந்தது.
விரைந்து சென்ற செங்கம் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் அங்கே பதுங்கி இருந்த விஜயகுமார் மேகநாதன் ஆகியோரை மடக்கி பிடித்தனர். பின்னர் செங்கம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில் தங்களது லாரியை எடுத்துச் சென்று விபத்து ஏற்படுத்தியதால் கோபத்தில் தாக்கியதாகவும் அதில் அவர் இறந்து விட்டதால் செய்வதறியாது ஏரிக் கரையில் புதைத்து விட்டு தப்பி சென்றதாகவும் போலீசாரிடம் இருவரும் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சடலம் புதைக்கப்பட்ட இடத்தை அவர்கள் அடையாளம் காட்டியதை அடுத்து தாசில்தார் முருகன் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் சடலத்தை தோண்டி எடுத்து மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் சடலம் ஹரிஷ் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து விஜயகுமார் மற்றும் மேகநாதன் மீது போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
வாத்து மேய்க்கும் கூலி தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டு ஏரியில் புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.