கழுத்தில் நாட்டுத்துப்பாக்கி குண்டு பாய்ந்து பசுமாடு உயிரிழப்பு
பசுமாடு கழுத்தில் நாட்டுத்துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
பசு (கோப்பு படம்)
செங்கம் அருகே மர்மநபர்கள் வனவிலங்குகளை வேட்டையாடியபோது, பசுமாடு கழுத்தில் நாட்டுத்துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஆண்டிப்பட்டி ஊராட்சி வனப்பகுதியையொட்டி உள்ள பூ முல்லை கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேலு. இவா் கருப்பு நிறத்தில் கொம்பில்லாத பசுமாட்டை வளா்த்து வந்தாா்.
இவர் தனது விவசாய நிலத்தில் வழக்கம் போல, மாட்டுக்கு இரவு தண்ணீா் வைத்து வனப் பகுதியை ஒட்டியுள்ள தனது விவசாய நிலத்தில் கட்டி வைத்துவிட்டு, அதே பகுதியில் உள்ள தனது வீட்டில் படுத்துத் தூங்கினாா்
அப்போது நள்ளிரவு வனவிலங்குகளை வேட்டையாட வனப்பகுதியில் சுற்றி திரிந்து கொண்டிருந்த மர்ம நபர்கள் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதில் கழுத்தில் குண்டு பாய்ந்து பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜவேலு, உடனடியாக மேல் செங்கம் வனத்துறை அலுவலகம், காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து புகார் அளித்தார்.
மாடு கருப்பு நிறத்தில் கொம்புகள் இல்லாமல் படுத்திருந்ததைப் பாா்த்து வன விலங்குகளை வேட்டையாட வந்த மா்மக் கும்பல், காட்டுப் பன்றி என நினைத்து மாட்டை துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
போலீஸாரும், வனத்துறையினரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். அடிக்கடி துப்பாக்கி சப்தம் மேலும், அந்தப் பகுதியில் இரவு நேரத்தில் அடிக்கடி துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்கிாம். இதனால் விவசாயிகள் இரவு நேரத்தில் தங்களது விளை நிலத்தில் உள்ள கட்டடத்தை விட்டு வெளியே வந்து நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்கு அச்சப்படுகிறாா்கள்.
இதனால் வனத்துறையினா் அப்பகுதியில் இரவு நேரத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வன விலங்குகளை வேட்டையாடும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனா். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.