சாத்தனூர் அருகே காப்புக்காட்டில் மானை வேட்டையாடிய 4 பேர் கைது
சாத்தனூர் அருகே மானை வேட்டையாடி இறைச்சியை கூறுபோட்டுக்கொண்டிருந்த 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
சாத்தனூர் அருகே மானை வேட்டையாடி இறைச்சியை கூறுபோட்டுக்கொண்டிருந்த 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
சாத்தனூர் வனச்சரக அலுவலர் சீனிவாசன் தலைமையில் வனவர் ராதா, வனக்காப்பாளர்கள் சிலம்பரசன், கார்த்திகேயன், ராஜ்குமார், வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் சாத்தனூர் வனச் சரகம், பெண்ணையாறு காப்புக் காடுபகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அதிகாலை 2 மணி அளவில் கருவட்டாம்பாறை அருகே சென்றபோது ஒரு கும்பல் அங்கு இருந்தது.
அவர்களை வனத்துறையினர் நெருங்கியபோது அவர்கள் தப்பி ஓட முயன்றனர். வனத்துறையினர் அவர்களை விரட்டிப்பிடித்து மடக்கினர். அவர்கள் நாட்டு துப்பாக்கியால் புள்ளிமானை வேட்டையாடி இறைச்சியை கூறுபோட்டுக்கொண்டிருந்தது தெரியவந்தது.விசாரணையில் அவர்கள் தண்டராம்பட்டை சேர்ந்த சேகர், புளியம்பட்டியை சேர்ந்த வரதன், சங்கர், ஏழுமலை என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்து நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். மேலும் மான் இறைச்சியையும் அவர்கள் கைப்பற்றினர். பின்னர் 4 பேரையும் மாவட்ட வன அலுவலர் நாகசதீஷ் உத்தரவின் படி கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
மதுபாட்டில்கள் திருட்டு
வந்தவாசி அருகே டாஸ்மாக் கடை சுவரை துளையிட்டு மதுபாட்டில்கள் திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வந்தவாசி அருகே நல்லூர் கிராமத்தில் விவசாய நில பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் மேற்பார்வையாளரான வந்தவாசியை சேர்ந்த ராமன் என்பவர் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டுச் சென்றார்.
இந்த நிலையில் நள்ளிரவு இந்த கடையின் பக்கவாட்டு சுவரை துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் மதுபாட்டில்களை திருடிச் சென்றுள்ளனர்.
காலை அந்த வழியாகச் சென்றவர்கள் மதுக்கடை சுவரில் துளையிட்டிருப்பதை கண்டு தெள்ளார் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.