திருவண்ணாமலை தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,158 வழக்குகளுக்கு தீர்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,158 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2022-08-14 01:29 GMT

லோக் அதாலத்  நிகழ்ச்சியை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜமுனா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் கிளை நீதிமன்றங்களில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜமுனா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி இருசன்பூங்குழலி, 'போக்சோ' நீதிபதி பார்த்த சாரதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். இதில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட அளவில் நடைபெற்ற லோக் அதாலத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 305 வழக்குகள் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்டன. இதில் 1158 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.10 கோடியே 8 லட்சத்து 46 ஆயிரத்து 349 பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயா தலைமை தாங்கினார். சார்பு நீதிபதி தாவூத்தம்மாள், நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி வக்கீல் சங்க தலைவர் எஸ்.ஸ்ரீதர் வரவேற்றார்.

இதில் 1150-க்கும் மேற்பட்ட நிலுவை வழக்குகள் இருந்த நிலையில் 174 வழக்குகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன. இந்த வழக்குகளுக்கு ரூ.2 கோடியே 79 லட்சத்து 70 ஆயிரத்துக்கு தீர்வு காணப்பட்டது.

செங்கம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பாக நடந்த நிகழ்ச்சியில் சார்பு நீதிமன்ற நீதிபதி மற்றும் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் ஜி.ராதாகிருஷ்ணன், மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜி.தாமரை இளங்கோ, குற்றவியல் நீதித்துறை நடுவர் பி.வித்யா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக 749 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில் 86 வழக்குகளில் ரூ.66 லட்சத்து 89 ஆயிரத்து 397 மதிப்பிலான தாவாக்கள் சமரசம் செய்து முடித்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரசு வக்கீல்கள் ராஜமூர்த்தி, கே.ஆர்.ராஜன், வக்கீல் சங்க முன்னாள் தலைவர்கள் வி.வெங்கடேசன், ஏ.சிகாமணி, கே.சங்கர், எஸ்.தனஞ்செழியன், மூத்த வழக்கறிஞர் பத்மநாபன் மற்றும் வழக்கறிஞர்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட சட்ட பணிகள் குழு நிர்வாக உதவியாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News