ஆரணி அருகே கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் சிறைத்தண்டனை

கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஆரணி கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.;

Update: 2023-04-26 11:03 GMT

கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஆரணி கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் யோகானந்தம் (வயது 39). அதே பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (39). இவர்கள் இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 11.7.2019 அன்று இரவு 7 மணி அளவில் ஆரணி பழைய பஸ் நிலையம் வழியாக யோகானந்தம் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த பாண்டியன் முன்விரோதம் காரணமாக யோகானந்தத்தை கத்தியால் குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மறுநாள் பாண்டியனை வி.ஏ.கே. நகர் பகுதி ஆற்றுப்பாலம் அருகே கைது செய்தனர்.

இந்த கொலை வழக்கு ஆரணி ஒருங்கிணைந்த கோர்ட்டில் உள்ள மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்ற நீதிபதி கே.விஜயா தீர்ப்பு கூறினார். அதில் பாண்டியனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

2 பேருக்கு அபராதம்

திருவண்ணாமலை அருகே காட்டுப்பன்றி இறைச்சியை விற்பனை செய்த 2 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை கண்ணமடை காப்புக்காடு பகுதியில் காட்டுப்பன்றிகள் வேட்டையாடப்படுவதாக திருவண்ணாமலை சரக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் சீனிவாசன் தலைமையில் வனக்காப்பாளர்கள் முகமதுசுல்தான், சங்கீதா, திவானி உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது திருவண்ணாமலை அருகில் உள்ள எடப்பாளையம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ஆறுமுகம் (வயது 55), பாவுப்பட்டு அருகில் உள்ள எலிக்குத்தி கிராமத்தை சேர்ந்த காசி (67) ஆகியோர் காட்டுப்பன்றியை வேட்டையாடியதும், பின்னர் அவர்கள் அதனை அறுத்து கூறு போட்டு பொட்டலமாக கட்டி எலிக்குத்தி கிராமத்தில் கூடையில் வைத்து காட்டுப்பன்றி இறைச்சியை விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்த 2 பேரையும் வனத்துறையினர் பிடித்தனர். பின்னர் அவர்களை வனத்துறையினர் திருவண்ணாமலை வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து மாவட்ட வன அலுவலர் அருண்லால் உத்தரவின் பேரில் அவர்கள் இருவருக்கும் சேர்த்து ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News