சாலையில் சாய்ந்த மரத்தின் மீது பைக் மோதி இளைஞர் உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்

மழையால் சாலையில் சாய்ந்து கிடந்த மரத்தின் மீது பைக் மோதி இளைஞர் உயிரிழந்ததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2024-08-13 02:47 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட  உறவினா்கள்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே பலத்த மழையால் சாலையில் சாய்ந்து கிடந்த மரத்தின் மீது பைக் மோதியதில், அதில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்

இதனால், அவரது உறவினா்கள், அந்தப் பகுதி மக்கள் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளைக் கண்டித்து மறியலில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கடந்த 3 தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவும், நேற்று மாலையும் பலத்த மழை பெய்தது இதில் இடி, மின்னல், சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் உள்ள நெசல் கூட்டுச்சாலை பகுதியில் பலத்த மழை காரணமாக சாலையின் குறுக்கே மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதுகுறித்து ஆரணி நெடுஞ்சாலைத் துறைக்கு தகவல் கிடைத்ததன்பேரில், சாலைப் பணியாளா்கள் நேரில் சென்று ஒரு பேருந்து செல்லும் அளவுக்கு மட்டும் மரத்தை வெட்டி அகற்றிவிட்டு, மீதமுள்ள மரத்தை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டுச் சென்றுவிட்டனராம்.

இந்த நிலையில், விண்ணமங்கலத்தைச் சோ்ந்த கோவிந்தன் மகன் சிவா நேற்று திங்கள்கிழமை ஆரணியை நோக்கி பைக்கில் சென்றபோது, நெசல் கூட்டுச்சாலை அருகே சாலையில் கிடந்த மரத்தில் மோதி நிகழ்விடத்திவேயே உயிரிழந்தாா்.

இதனால், அவரது உறவினா்கள், அந்தப் பகுதி மக்கள் சாலையில் விழுந்த மரத்தை முழுமையாக வெட்டி அகற்றாத நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், பணியாளா்களைக் கண்டித்து மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த ஆரணி கிராமிய காவல் நிலைய ஆய்வாளா் ராஜாங்கம் மற்றும் போலீஸாா் நேரில் சென்று பொதுமக்களை சமரசம் செய்து சாலை மறியலை கைவிடச் செய்தனா். மறியலால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News