சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
ஆரணி அருகே மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.;
சுவர் இடிந்து விழுந்ததில் பலியான மூதாட்டி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிைய அடுத்த இரும்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட பழங்காமூர் பகுதியில் கமண்டலநதி ஆற்றங்கரைக்கு அருகில் காவாங்கரை பகுதியில் ராமனின் மனைவி பச்சையம்மாள் (வயது 70) ஓலை குடிசை போட்டு தனிமையில் வசித்து வந்தார்.
சமீபத்தில் பெய்த மழையால் குடிசையின் தரையும், மண் சுவர்களும் ஈரமாக இருந்தது. அதில் தான் அவர் படுத்துத் தூங்கி எழுந்து வந்தார். நேற்று இரவு சாப்பிட்டு விட்டு வழக்கம்போல் ஓலை குடிைசயில் படுத்துத் தூங்கி கொண்டிருந்தார். அதிகாலை சுமார் 2 மணியளவில் திடீரென குடிசையின் மண்சுவர் இடிந்து பச்சையம்மாள் மீது விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி பற்றி தகவல் அறிந்ததும் இரும்பேடு ஊராட்சி மன்ற தலைவர் தரணி வெங்கட்ராமன், ஒன்றிய கவுன்சிலர் பூங்காவனம் கவுரி ஆகியோர் உடனே கிராம நிர்வாக அலுவலர் கோபாலுக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புப்படை வீரர்கள் விரைந்து வந்து மண் சுவரின் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியான பச்சையம்மாளின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஆரணி டவுன் போலீசில் இறந்த பச்சையம்மாளின் மகள் தவமணி கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.