ஆரணி நகராட்சியை கைப்பற்ற போவது யார்?
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி நகராட்சியை கைப்பற்ற போவது யார்?;
ஆரணி நகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. அதிக வார்டுகளில் வெற்றி பெற்று நகராட்சி பதவியை கைப்பற்றுவதில் தி.மு.க., அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வருவாய் மிக்க நகராட்சியாக செயல்பட்டு வருவது ஆரணி நகராட்சி ஆகும். ஆரணி 1951-ம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டது. பின்னர் 1971-ம் ஆண்டு 2-ம் நிலை நகராட்சியாகவும், 1995-ம் ஆண்டு முதல் நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.
ஆரணி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் மொத்தம் 54 ஆயிரத்து 914 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்காளிக்க ஏதுவாக 65 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஆரணி நகராட்சியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க. மற்றும் சுயேச்சைகள் என 130 வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள்.
அ.தி.மு.க. 33 வார்டுகளிலும் போட்டியிடுகிறது . இதில், தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் 27 வார்டுகளில் நேரடியாக மோதுகின்றனர். இதனால் ஆரணி நகராட்சியை கைப்பற்றுவதில் கடுமையான போட்டி நிலவுகிறது.
நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவடைந்ததால், வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் மேள தாளங்கள் முழங்க வீடு, வீடாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
நாளை (சனிக்கிழமை) வாக்குப்பதிவும், 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
தேர்தலில் வெற்றி பெற்று யார் நகராட்சியை கைப்பற்ற போகிறார்கள் என்பது வாக்கு எண்ணிக்கை நாளான 22-ந்தேதி அன்று மதியம் தெரியவரும்.