ஆரணி அருகே அனுமதியின்றி நடந்த காளை விடும் விழாவில் 15 பேர் காயம்

ஆரணி அருகே குன்னத்தூரில் அனுமதியின்றி காளை விடும் விழா நடந்தது. இதில் 15 பேர் லேசான காயம் அடைந்தனர்.

Update: 2022-03-21 07:10 GMT

திருவண்ணாமலை மாவட்டம் குன்னத்தூரில் காளை விடும் விழா நடந்தது.

உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு காளை விடும் விழா நேற்று திருவண்ணாமலை மாவட்டம்  குன்னத்தூரில் நடந்தது. இதற்கு முறையான அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இருப்பினும் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளை விடும் விழாவில் பங்கேற்க காளையின் உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர்.

குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த காளைகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-ம் பரிசாக ரூ.75 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.60 ஆயிரம் உள்பட மொத்தம் 63 பரிசுகள் வழங்கப்பட்டன.

பரிசுகளை ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் எஸ்.அரிதாஸ், ஒன்றியக்குழு உறுப்பினர் பகுத்தறிவு மாமது, மேற்கு ஆரணி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் வி.எஸ்.செந்தில்நாதன் ஆகியோர் வழங்கினர்.

நிகழ்ச்சியில் ஆரணி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற போது காளைகள் மோதியதிலும், மக்கள் அதிகம் கூடியிருந்த பகுதியில் மிரண்டு ஓடியதிலும் 15 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

அவர்களுக்கு அங்கிருந்த 108 அவசர ஆம்புலன்ஸ் உதவியாளர்கள், காமக்கூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.  நீண்ட நாட்கள் கழித்து காளை விடும் விழா காரணமாக கிராமமே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது.

ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ், கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Tags:    

Similar News