சேத்துப்பட்டு ஒன்றியத்தில் மாதிரி கிராமமாக உலகம்பட்டு தேர்வு
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒன்றியத்தில் உலகம்பட்டு கிராமம் மாதிரி கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சேத்துப்பட்டு ஒன்றியத்தில் 49 ஊராட்சிகள் உள்ளன. அதில் உலகம்பட்டு, பெரணம்பாக்கம் ஆகிய ஊர்கள் மாதிரி கிராமமாக தேர்ந்தெடு்க்கப்பட்டுள்ளது. அங்கு வீடுகளில் கழிவறை கட்டுதல், குப்பைகளை சேகரித்து மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியாக தரம் பிரித்தல், மண் புழு உரம் தயாரித்தல், அரசு கட்டிடங்களை புனரமைத்தல், அடிப்படை வசதிகளை நிறைவேற்றுதல் போன்ற பணிகள் தொடக்க நிகழ்ச்சி உலகம்பட்டு கிராமத்தில் நடந்தது.
முன்னதாக கிராம பஞ்சாயத்து கட்டமைப்பு குறித்த வரைபடம் தரையில் ஓவியமாக தீட்டப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது. பணிகள் தொடக்க நிகழ்ச்சிக்கு சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராணி அர்ஜுனன் தலைமை தாங்கினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் வேணுகோபால், பணி பார்வையாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலகம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் வேல்விழி ஹரி வரவேற்றார். அதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலட்சுமி பங்கேற்று பஞ்சாயத்தில் மேற்கொள்ளப்பட பணிகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.