திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை: வீடு இடிந்து 2 பேர் படுகாயம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக போளூரில் 64.8 மில்லி மீட்டர் மழை பதிவானது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து இன்று காலை வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. செய்யாறு, போளூர், சேத்துப்பட்டு, திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மற்ற இடங்களில் மிதமான மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக போளூரில் 64.8 மில்லி மீட்டர் மழை பதிவானது.
சேத்துப்பட்டு பகுதியில் நேற்று நள்ளிரவு இடியுடன் மழை பெய்தது. ராந்தம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் (வயது 50). இவரது மனைவி சூடாமணி, மகன் பூங்காவனம், உறவினர் முனியம்மாள் ஆகியோர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது சங்கர் வீட்டின் மீது இடி தாக்கியது. இதில் சங்கரின் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. மேலும் அருகில் இருந்த மாட்டுக்கொட்டகையும் இடிந்து விழுந்தது. இடி தாக்கியதில் அங்கிருந்த பசுமாடு சம்பவ இடத்திலேயே பலியானது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய சங்கர் குடும்பத்தினரை மீட்டனர். இதில் சங்கர் அவரது மனைவி சூடாமணி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆரணி டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கண்ணமங்கலம், வண்ணாங்குளம், காட்டுகாநல்லூர், அம்மாபாளையம், புதுப்பாளையம், குன்னத்தூர், சேவூர், முள்ளிபட்டு, எஸ்.வி.நகரம், இரும்பேடு, உள்ளிட்ட கிராமங்களில் காற்றுடன் கூடிய பலத்த கனமழை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இதனால் பல இடங்களில் மழைநீர் சாலையில் தேங்கியது. ஆரணி கோட்டை மைதானம் அருகில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் மழைநீர் வெள்ளம் புகுந்தது. இதனால் அலுவலகம் முழுவதும் வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகம் எதிரில் மழைநீர் சாலையில் தேங்கியுள்ளது. பொதுமக்கள் இந்த சாலையை கடக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- திருவண்ணாமலை 37, ஆரணி 11.6, செய்யாறு 51, செங்கம் 5.4, ஜமுனாமரத்தூர் 18.3,வந்தவாசி 25, போளூர் 64.8, தண்டராம்பட்டு 17.8, கலசப்பாக்கம் 5, சேத்துப்பட்டு 22.6, கீழ்பென்னாத்தூர் 33.2, வெம்பாக்கம் 45.