திருவண்ணாமலை அருகே ஆடுகள் வளர்க்க பயனாளிகளுக்கு பயிற்சி முகாம்
திருவண்ணாமலை அருகே ஆடுகள் வளர்க்க பயனாளிகளுக்கு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.;
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒன்றியத்தில் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் விதவைகள், ஆதரவற்ற பெண்களுக்கு ஆடுகள் வளர்ப்பது குறித்து 100 பயனாளிகளுக்கு பயிற்சி முகாம் இடையன்கொளத்தூர் சமுதாய கூடத்தில் நடந்தது.
முகாமுக்கு கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் விஜயகுமார், கெங்கைசூடாமணி ஊராட்சி மன்ற தலைவர் சுகுணா வெங்கடேசன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சம்பத், பிரேமலதா ராஜசிம்மன், நம்பேடு கால்நடை மருத்துவர் சக்தி பூர்ணிமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேத்துப்பட்டு கால்நடை மருத்துவர் ஹரிகுமார் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக ஒன்றியக்குழு தலைவர் ராணி அர்ஜுனன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் முருகையன், ஒன்றிய தி.மு.க. செயலாளர் எழில்மாறன் ஆகியோர் பங்கேற்றனர்.
கால்நடைத்துறை உதவி பேராசிரியர் பாலமுருகன் பங்கேற்று பேசியதாவது:-
தமிழக அரசு, பயனாளி ஒருவருக்கு 4 பெண் ஆடுகள், ஒரு கிடா உள்பட 5 ஆடுகள் வழங்குகிறது. இந்த ஆடுகளை வளர்க்க அகத்திக்கீரை, சவுடாளி தழை, சோலை தண்டுகள் வளர்ப்பு புல் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். சிறிய கொட்டகை அமைத்து ஆடுகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
வெயில் நேரத்தில் ஆடுகளை கொட்டகையில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். அரிசியால் தயாரிக்கப்படும் உணவு வகைகளை ஆடுகளுக்கு கொடுக்கக்கூடாது. புண்ணாக்கு ஊற வைத்த தண்ணீரை கொடுக்கலாம்.
இந்த வழிமுறைகளை பின்பற்றி ஆடுகளை வளர்த்தால் நோய் எதிர்ப்பில் இருந்து பாதுகாக்கலாம். ஆடுகள் வளர்ப்பால் கிராமப்புற பயனாளிகளின் வாழ்வாதாரம் உயரும். பயனாளிகளுக்கு வழங்கப்படும் ஆடுகளுக்கு தமிழக அரசு மூலம் இன்சூரன்ஸ் செய்து தரப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் சேத்துப்பட்டு தொடக்க கூட்டுறவு சங்க இயக்குனர் ஏழுமலை நன்றி கூறினார்.