சென்டர் மீடியன் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திடீர் சாலை மறியல்
ஆரணியில் சாலை பகுப்பான் (சென்டர் மீடியன்) அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், வியாபாரிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆரணியில் உள்ள கார்த்திகேயன் சாலையை அகலப்படுத்தி, சென்டர் மீடியன் அமைக்கும் பணி கடந்த 6 மாதமாக நடந்து வருகிறது.
கார்த்திகேயன் சாலையில் புனித வளனார் மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் சென்டர் மீடியன் அமைக்கும் பணி நடந்தது. அப்போது அப்பகுதியில் உள்ள வியாபாரிகள், பொதுமக்கள் திரண்டு வந்து கார்த்திகேயன் சாலை அகலமாக இல்லை, குறுகியதாக உள்ளது. அதன் நடுவே சென்டர் மீடியன் அமைப்பதால் மீண்டும் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படும். இந்தப் பகுதியில் 30 மீட்டர் தூரத்துக்கு சாலை மட்டுமே அமைக்க வேண்டும், சென்டர் மீடியன் அமைக்கக்கூடாது, எனக் கூறி திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் நெடுஞ்செழியன், ஆரணி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மனு கொடுக்காமல் திடீரெனச் சாலை மறியலில் ஈடுபடுவது முறையற்றது, எனக்கூறி மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.
அப்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரி, பள்ளிக்கு அருகில் 20 மீட்டர் தூரத்துக்கு சென்டர் மீடியன் அமைக்கிறோம், என்றார். அதற்கு பொதுமக்கள், கார்த்திகேயன் சாலை குறுகியதாக உள்ளது. அதில் 30 மீட்டர் தூரத்துக்கு சாலையை மட்டும் அகலப்படுத்த வேண்டும், சென்டர் மீடியன் அமைக்க வேண்டாம், எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
அங்கு, நீண்ட நேரம் கூடியிருந்த பொதுமக்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால், அங்கு தற்போது சென்டர் மீடியன் அமைக்கும் பணி நடக்கவில்லை.