கோவில் நகை திருடியவர்கள் கைது உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்

ஆரணியில் கோவில்களில் திருடிய வேலூரை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-03-05 12:16 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கோவில்களில் திருடிய வேலூரை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் ஆரணிப்பாளையம் காந்தி ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து மர்ம கும்பல் திருடிச் சென்றனர்.இதேபோல ஆரணிப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோவிலிலும் பூட்டை உடைத்து மர்ம கும்பல் உண்டியலை தூக்கிச் சென்றனர். மேலும் ஆரணி - சேத்துப் பட்டு நெடுஞ்சாலையில் சக்தி நகரில் அமைந்துள்ள முக்கிய அம்மன் கோவிலிலும் உண்டியல் பூட்டை உடைத்து திருடிச் சென்றனர்.

கோவில்களில் தொடர் திருட்டை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் , உத்தரவின் பேரில் ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர்.

அதில், வேலூர் ஓட்டேரி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த தனுஷ் (வயது 20), 17 வயது சிறுவன் மற்றும் வந்தவாசியை அடுத்த கீழ்கொவளைவேடு பகுதியை சேர்ந்த பிரபுதேவா (22) என்பது தெரியவந்தது.

அவர்கள் 3 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் உல்லாச வாழ்க்கைக்காக கோவில் உண்டியல்களில் நகை, பணத்தை திருடியது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் தனுஷ், பிரபுதேவா ஆகியோரை வேலூர் மத்திய சிறையிலும், 17 வயது சிறுவனை கடலூர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாராட்டினார்.

மாணவி கர்ப்பம்- வாலிபர் கைது

பள்ளி மாணவியை கர்ப்பம் ஆக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவை சேர்ந்தவர் சதீஷ் (வயது 22) இவர் திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியுடன் பழகி வந்தார்.அப்போது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசை வார்த்தைகள் பேசி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

சிறுமியின் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் பெற்றோர் சிறுமியை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது சதீஷ் தான் காரணம் என்பது தெரிய வந்தது.இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் பெற்றோர் புகார் செய்தனர்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷை கைது செய்தனர்.

Tags:    

Similar News