திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள்: ஆரணியில் 22 பவுன் நகைகள் கொள்ளை
ஆரணியில் 22 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வி ஏ கே நகர் பகுதியில் உள்ள தேனருவி நகரில் தனியார் பஸ்பேருந்து உரிமையாளர் செல்லப்பா , இவரது மனைவி உமா மகேஸ்வரி ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர் . இவர்கள் இருவரும் சென்னையில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் மகள் ராகினி மட்டும் தீபாவளி விடுமுறைக்கு வீட்டுக்கு வந்திருந்தார். கடந்த சில வாரங்களாகவே செல்லப்பா மனைவி உமா மகேஸ்வரிக்கு கண்ணில் பிரச்சனை ஏற்பட்டு வருவதால் வீட்டை மாற்ற வேண்டுமென ஜோதிடர்கள் சொல்லியதன் பேரில் அருகாமையில் உள்ள வீட்டிற்கு குடி பெயர்ந்து உள்ளனர்.
இதனால் அவரது வீட்டில் தினசரி காலை மாலை இருவேளையும் விளக்கு ஏற்றுவதற்கும் லைட் போடுவதற்கு மட்டும் சென்று வருவார்கள்.
இந்நிலையில் நேற்று காலை பேருந்து அதிபர் செல்லப்பா வீட்டுக்கு வழக்கம்போல் சென்றுள்ளார் . அப்போது பார்க்கும்போது பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்க்கும் போது இரண்டு அறைகளில் பொருட்கள் சிதறி கிடந்தன , அங்கு பீரோக்களும் திறந்து இருப்பதைக் கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 22 சவர நகைகள் கொள்ளை போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் பக்கத்து பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 10 சவரன் தங்க நகைகளும் வெள்ளி பொருட்களும் அங்கு இருப்பதைக் கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டனர் . பீரோக்கள் அருகாமையில் சாவிகள் வைக்கப்பட்டிருந்ததால் சாவியை எடுத்து பீரோக்களை திறந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஆரணி நகர காவல் நிலையத்தில் தனியார் பேருந்து அதிபர் செல்லப்பா கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் புகழ், காவல் உதவி ஆய்வாளர்கள் சுந்தரேசன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். கைரேகை நிபுணரான உதவி ஆய்வாளர் ரமேஷ் வரவழைக்கப்பட்டு அங்கு இருந்த கைரேகை தடயங்களை பதிவு செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டுக்கு அடிக்கடி செல்லக்கூடியவர்கள் யார், சாவி பீரோ அருகாமையில் இருக்கும் தகவல் தெரிந்தவர்கள் யார் யார் என தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
காட்டுப்பன்றிகளை வேட்டையாடிய இரண்டு பேர் கைது
திருவண்ணாமலை வன சரகத்திற்கு உட்பட்ட காப்புக்காடு பகுதியில் காட்டுப் பன்றிகள் வேட்டையாடப்படுவதாக திருவண்ணாமலை வன அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து நேற்று அதிகாலையில் திருவண்ணாமலை வனசரக அலுவலர் சீனிவாசன் தலைமையி லான வனத்துறையினர் காப்பு காடு பகுதியில் ரோந்து பணி யில் ஈடுபட்டனர்.
அப்போது வடமாத்தூர் அருகில் உள்ள வனப்பகுதியில் 2 பேர் காட்டு பன்றிகளை வேட்டையாடி இறைச்சிகளை வெட்டி விற்பனைக்காக கொண்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் வடமாத்தூர் பகுதியை சேர்ந்த திருமலை, பாலியப்பட்டு பகுதியை சேர்ந்த சாமி கண்ணு என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை வனத்துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.