திருவண்ணாமலை: ஆரணி நகர மன்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
ஆரணியை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர மன்ற கூட்டம் அதன் தலைவர் மணி தலைமையில் நடைபெற்றது ஆணையர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நகராட்சியில் ஏப்ரல் 1 முதல் திட்டக் கழிவு மேலாண்மை திட்டத்தில் தூய்மை பணிகள் 33 வார்டுகளிலும் தனியார் மூலம் மேற்கொள்ளப்பட இருப்பதால் அதற்கு ஒப்பந்தப்புள்ளி கோர அனுமதி பெறவும், குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் நீர் வரத்து பகுதிகளான ஆறு, குளம், ஏரிகளில் கலந்து நிலத்தடி நீர் மாசுபடுகிறது. இதன் காரணமாக நகராட்சியில் நான்கு இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்றும் பணிக்கு நான்கு ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது இதனை வாங்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நகராட்சி சொந்தமான கடைகளில் வாடகை உயர்வு காரணமாக குத்தகைதாரர்கள் வாடகை நிலுவை செலுத்தாமல் கடைகளை காலி செய்து விட்டு சென்று விட்டனர். ஆனால் அவர்கள் கடைகளை காலி செய்தும் கணினியில் மாதம் தோறும் வாடகை கட்டணம் அதிகரித்து நிலுவை காண்பித்து வருகிறது. இதனால் காலி செய்தவர்களின் பெயர்களை கணினியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிறப்பு நிலை நகராட்சியாக நிலை உயர்த்த ஆண்டு வருமானம் ரூபாய் 15 கோடிக்கு மேல் இருக்க வேண்டும் என்றும், ரூபாய் 9 கோடியில் இருந்து ரூபாய் 15 கோடி வரை ஆண்டு வருமானம் இருந்தால் தேர்வு நிலை நகராட்சியாக நிலை உயர்த்த வேண்டும் என்றும், ரூபாய் 6 கோடிக்கு மேல் 9 கோடி வரை என்றால் முதல் நிலை நகராட்சி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நமது ஆரணி நகராட்சியின் வருமானம் 3 ஆண்டுகளில் சராசரியாக 14.47 கோடியாக உள்ளது. இதன் காரணமாக முதல் நிலை நகராட்சியில் இருந்து தேர்வு நிலை நகராட்சியாக நிலை உயர்த்த தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
மேலும் கூட்டத்தில் உறுப்பினர்கள் தங்களது பகுதி தேவைகள் குறித்து கேள்விகளை எழுப்பினர். அதைத் தொடர்ந்து பேசிய நகர மன்ற தலைவர் மணி நகராட்சி கடைகளின் வாடகை அதிகமாக உள்ளதை குறைக்க ஆலோசனை செய்யப்படும் என தெரிவித்தார்.