ஆரணி அருகே மக்களுடன் முதல்வர் முகாம்

ஆரணி அருகே மக்களுடன் முதல்வர் முகாமில் பயனாளிகளுக்கு ஆட்சியர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.;

Update: 2024-08-21 01:36 GMT

மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கிய  ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்

ஆரணி அருகே மக்களுடன் முதல்வர் முகாமில் பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

ஆரணி அருகே முள்ளண்டிரம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்புப் முகாம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

முகாமில் முள்ளண்டிரம், 12 புத்தூா், பூசிமலைக்குப்பம், வேதாஜிபுரம், வெட்டியாந்தொழுவம் ஆகிய கிராம மக்கள் மனு கொடுத்தனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பாஸ்கரபாண்டியன் பேசியதாவது:

தமிழக அளவில் மனுக்கள் பெற்று பயன் பெற்றது திருவண்ணாமலை மாவட்டம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. சுமார் 92 முகாம்கள் நடத்தப்பட்டு 70ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு 20ஆயிரம் மனுக்கள் வரை தீர்வு காணப்பட்டுள்ளது. வருவாய் துறை சம்பந்தமான மனுக்களே அதிக அளவில் பெறப்பட்டுள்ளது , மேலும், பள்ளி மாணவா்களின் ஜாதி சான்றிதழ் தொடா்பான விண்ணப்பங்கள் அந்தந்த பள்ளிகளிலேயே தலைமை ஆசிரியா்கள் மூலம் பெறப்பப்பட்டு, மனுக்கள் அந்தந்த பகுதியில் நடைபெறும் மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் இணையதளம் மூலம் பதிவு  செய்யப்படுகிறது.

இதுவரை ஜாதி சான்றிதழ் தொடா்பாக 50,000 மனுக்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்திலேயே இங்குதான் அதிகளவில் ஜாதி சான்றிதழ் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

முகாமில் 10 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம், சிறு விவசாயி அங்கீகார சான்றிதழ் மற்றும் முதல் பட்டதாரி சான்றிதழையும், வேளாண்மைத் துறை சாா்பில் 4 பயனாளிகளுக்கு தலா ரூ.600 மதிப்பில் வேளாண் இடுபொருள்களையும், தோட்டக்கலைத் துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.2000 மதிப்பிலான வேளாண் இடுபொருள்களையும், கூட்டுறவுத் துறை சாா்பில் ரூ. 47 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் 13 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிக்கான ஆணைகளையும் மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

இந் நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் தொழிலாளர் திறன் மேம்பாட்டு வாரிய உறுப்பினர் அன்பழகன், நகர மன்ற தலைவர் மணி ,ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய குழு பெருந்தலைவர் கனிமொழி சுந்தர், மாவட்ட கவுன்சிலர் அருணா குமரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் தசரதராமன் , வட்டாட்சியர் கெளரி ,மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News