பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள்: போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

பஸ்களில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும், என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை.;

Update: 2022-04-02 06:31 GMT

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை கிளை மேலாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்,ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் முன்னிலை வகித்து பேசினார்.

தனியார், அரசு பஸ்களில் படிக்கட்டுகள், ஏணியில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும், என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆரணி-வேலூர் நெடுஞ்சாலையில் ரகுநாதபுரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமையில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை கிளை மேலாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. 

கூட்டத்தில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் முன்னிலை வகித்து பேசியதாவது:-

பஸ்சின் படிகளில் தொங்கிய படியும், பஸ்சின் பின்பக்கம் உள்ள ஏணியில் தொங்கியபடியும் பயணம் செய்யும் மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அறிவுறுத்தப்படுவார்கள். இதுபோன்ற தவறு செய்யும் மாணவர்களை அழைத்து ஒருமுறைக்கு இருமுறை எச்சரிக்கை செய்வோம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய மாட்டார்கள் என்ற எண்ணம் மாணவர்கள் மத்தியில் உள்ளது. மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை பாதிக்கக்கூடாது என்பதற்காக போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. எனினும், எச்சரிக்கையை மீறி தொடர்ந்து பஸ்களில் பின்பக்க ஏணி, படிகளில் தொங்கி கொண்டு பயணம் செய்யும் மாணவர்கள் மீது கண்டிப்பாக வழக்குப்பதிவு செய்யப்படும்.

ஒவ்வொரு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் போலீசார் வருவாய்த்துறையினர் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி உரிய விழிப்புணர்வு பிரசாரமும், துண்டு பிரசுரம் மூலமும் செய்ய வேண்டும். ஆரணியில் இருந்து செய்யாறு சாலை, தேவிகாபுரம் சாலை, போளூர் சாலை, படவேடு சாலை உள்ளிட்ட சாலைகள் வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஒரே நேரத்தில் இயக்கப்படுவது தவிர்க்கும் வகையில் மாலையில் பள்ளி வகுப்புகள் முடிந்து மாணவ-மாணவிகள் வெளியேறும் நேரம் மாணவர்களுக்கு தனியாக ஒரு நேரமும் மாணவிகளுக்கு தனியாக ஒரு நேரமும் மாற்றியமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக ஆரணி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் முருகேசன் வரவேற்றார். கூட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை கிளை மேலாளர்கள் வெங்கடேசன் (ஆரணி), கணேசன் (செய்யாறு), ஆத்மலிங்கம் (சேத்துப்பட்டு), விநாயகம் (வந்தவாசி), ராமு (வந்தவாசி) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News