சாராய சோதனைக்கு சென்ற போலீசார் மீது ராணுவ வீரர்கள் தாக்குதல்
ஆரணியில் சாராய சோதனையில் ஈடுபட்ட போலீசார் மீது தாக்குதல் நடத்திய ராணுவ வீரர்கள் கைது.
திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள்:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலம் போலீசார் சாராய சோதனைக்கு சென்றனர். போலீஸ்காரர் அன்பழகன் படவேடு சாலையில் சோதனை நடத்தினார்.
அதன் அருகே உள்ள குப்பம் கிராமத்தில் 4 பேர் குடிபோதையில் கலாட்டா செய்து கொண்டிருந்தனர். இதனை அன்பழகன் தட்டி கேட்டார். கலாட்டா செய்யாமல் வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். அப்போது அன்பழகனுக்கும் போதையில் இருந்த கும்பலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த எதிர்தரப்பினர் 4 பேர் சேர்ந்து போலீஸ்காரர் அன்பழகனை தாக்கினர்.
இது குறித்து தகவலறிந்த சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீஸ்காரரை தாக்கிய 4 பேரையும் கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணையில் அவர்கள் குப்பம் கிராமம் ஒரே குடும்பத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் அய்யப்பன் , பழனி , முருகன் மற்றும் உறவினர் சரணவன் என தெரியவந்தது. போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்கள் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
சாராயம் பதுக்கிய 2 பெண்கள் கைது
சந்தவாசல் பகுதியில் சாராயம் பதுக்கிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த சந்தவாசல் சி.சி.ரோடு காவாங்கரை பகுதியை சேர்ந்த சாந்தி , புஷ்பகிரி வனிதா, இவர்கள் இருவரும் தங்களது வீட்டின் பின்புறம் சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் சந்தவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்று இருவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 25 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்தனர்.
இருசக்கர வாகனம் திருடியவர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மில்லர்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ் . இவர், ஆரணி காந்தி ரோட்டில் காமராஜர் சிலை அருகே உள்ள பாத்திரக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர், கடையின் முன்பு தனது பைக் நிறுத்தியிருந்தார்.
பின்னர் வந்து பார்த்த போது பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு மற்றும் போலீசார் ஆரணி காந்தி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மொபட்டில் சந்தேகத்தின் பேரில் வந்தவரை நிறுத்தி விசாரணை நடத்தியதில், வெம்பாக்கம் தாலுகா குத்தனூர் கிராமத்தை சேர்ந்த முனியாண்டி என்பதும், பாத்திரக்கடையின் வெளியில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருடியதும் தெரியவந்தது. உடனே போலீசார் முனியாண்டியை கைது செய்து, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர்.