ஆரணி வெள்ள பாதிப்பு பகுதிகள் முன்னாள் அமைச்சர் ஆய்வு
ஆரணியில் வெள்ள பாதிப்பு பகுதிகளை ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
தொடர் மழை காரணமாக ஆரணியில் ஜெயலட்சுமி நகர் , காந்திநகர் , கேகே நகர் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இப்பகுதிகளை சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டார் .
அதைத்தொடர்ந்து பரசுராமன் தெருவில் பலத்த மழையால் வீடு சேதம் அடைந்த அண்ணாதுரையின் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் ரூபாய் 3000 நிவாரணம் 25 கிலோ அரிசியை வழங்கி அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.
ஆரணி ஒன்றியம் பனையூர் கிராமத்தில் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் ரூபாய் மூன்று கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது . இதனால் அந்த பகுதியில் மாற்று சாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . தொடர் மழை காரணமாக இந்த சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இந்த பகுதியை சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டு தண்ணீர் வெளியேற குழாய்கள் அமைத்து சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது ஆரணி ஒன்றிய செயலாளர் திருமால் , நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.