ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவர் என்ன ஆனார்? உறவினர்கள் சாலை மறியல்

ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவர் மாயமானது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்காததால், உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-05 05:22 GMT

காணாமல் போனவரை கண்டுபிடிக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல்

தேசூர் அருகே முளைபட்டு கிராமத்தை அடுத்த லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 43). அவரது மைத்துனர் சின்னராசு (18). இருவரும் நேற்று  மாலை 6 மணி அளவில் முளைப்பட்டு ஏரியில் மீன் பிடிப்பதற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றனர். அவர்களில் சின்னராசு மீன்பிடித்து விட்டு திரும்பினார். ஆனால் கன்னியப்பன்  அதிகாலை திரும்பவில்லை.

அவரது மனைவி தேவி, கன்னியப்பன் எங்கே என்று சின்னராசுவிடம் கேட்டதற்கு வீட்டுக்கு வந்திருப்பார் என நினைத்து  மீன் பிடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததாக கூறினார். உடனே உறவினர்கள் ஏரிக்கு சென்று பார்த்தபோது கன்னியப்பன் வைத்திருந்த டார்ச் லைட் மற்றும் அவருடைய துணி ஏரிக்கரையில் இருந்தது.

இது குறித்து தேசூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி தமிழ்நாடு மாநில மலைவாழ்மக்கள் பொதுச் செயலாளர் சரவணன் தலைமையில் தேசூர் காவல் நிலையம் அருகே வந்தவாசி செல்லும் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்

பின்னர் போலீசார் வந்து சமரசம் பேசி கன்னியப்பனை தேடி கண்டுபிடித்து தருவதாக போலீசார் கூறவே அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News