சொத்துகளை மீட்டுத்தரக்கோரி குழந்தைகள் திடீர் சாலை மறியல்

மனைவியை கொன்று விட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டதில், சொத்துகளை மீட்டுத்தரக்கோரி குழந்தைகள் திடீர் சாலை மறியல்

Update: 2021-11-16 06:42 GMT

ஆரணி-வந்தவாசி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

ஆரணியை அடுத்த ஆகாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி, விவசாயி. இவரின் மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு யோகேஸ்வரி (வயது 16), ஹேமமாலினி (9), கவுரிசங்கர் (7) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு சொந்தமாக வீட்டுக்கு அருகில் 2 ஏக்கர் 20 சென்ட் நிலம் உள்ளது.

ஆரணி பள்ளிக்கூட தெருவி்ல் கலைச்செல்வியின் தந்தை ஏழுமலை வசித்து வருகிறார். ஆரணியில் பூ வியாபாரம் செய்து வந்ததில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏழுமலை தனது கடன் சுமையை மகள் கலைச்செல்வியிடம் தெரிவித்துள்ளார். மருமகன் மூர்த்தியிடம் நிலப்பத்திரத்தை கொடுத்து, அதை அடகு வைத்து பணம் தருமாறு கேட்டுக் கொண்டார். மாமனார் ஏழுமலை கேட்டுக்கொண்டதால், மூர்த்தி அந்த நிலத்தை குமரன் என்பவருக்கு விற்பனை செய்து, பணம் பெற்று கடனை அடைத்துள்ளார்.

இதனிடையே கடந்த அக்டோபர் மாதம் 8-ந்தேதி மூர்த்தி தனது மனைவி கலைச்செல்வியை, உன்னால் தான் இந்த வீடு இன்று வேறு ஒருவருக்கு விற்கப்பட்டுள்ளது. நீ என்னை நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டாயே, எனக் கூறி ஆத்திரத்தில் சுத்தியலால் கலைச்செல்வியை அடித்துக்கொலை செய்து, வீட்டின் பின்பக்கம் இருக்கிற நிலத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்க விட்டுள்ளார். பின்னர், காவல்  விசாரணைக்கு பயந்த மூர்த்தியும் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தச் சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மூர்த்தியின் மகள்கள் யோகேஸ்வரி, ஹேமமாலினி, மகன் கவுரிசங்கர் ஆகியோர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் மற்றும் கிராம மக்களுடன் ஆரணி-வந்தவாசி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தந்தை விற்பனை செய்த சொத்துகளை மீட்டுத்தர வேண்டும் எனக்கோரிக்கை விடுத்தனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த ஆரணி டிஎஸ்பி  கோடீஸ்வரன் தலைமையிலான  போலீசார், ஆரணி மண்டல துணைத் வட்டாட்சியர் குமரேசன், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் சம்பந்தப்பட்டவர்களிடமும், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறவினர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.  

துணை வட்டாட்சியர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதன்பின்னர் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர்.

Tags:    

Similar News