தனியார் கோல்டு நிறுவனத்தில் வருவாய் கோட்டாட்சியர் கவிதா திடீர் ஆய்வு
ஆரணி அருகே தனியார் கோல்டு நிறுவனத்தில் வருவாய் கோட்டாட்சியர் கவிதா திடீர் ஆய்வு செய்தார்.;
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சேவூரில் கடந்த 6-ந்தேதி புதிதாக தனியார் கோல்டு நிறுவனம் திறக்கப்பட்டது. இங்கு ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால் மாதம் ரூ.25,000 முதல் ரூ.30,000 வீதம் 10 மாதங்களுக்கு திருப்பி வழங்கப்படும். மேலும் தங்க நாணயமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். இதனை நம்பி ஏராளமான பொதுமக்கள் நிறுவனத்திற்கு சென்று பணத்தை டெபாசிட் செய்துள்ளனர்.
இந்த நிறுவனம் மத்திய, மாநில அரசுகளின் அனுமதி பெற்று உள்ளதா? என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டுமென பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், மாவட்ட காவல் துறைக்கும் கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், தாசில்தார் க.பெருமாள், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழ், சப்-இன்ஸ்பெக்டர் ஷா்புதீன் ஆகியோர் சென்று மத்திய, மாநில அரசுகளின் அனுமதி உள்ளதா என்றும், அதற்கான அனுமதி கடிதத்தை காண்பிக்குமாறும் கேட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்குள்ள ஆவணங்களையும் ஆய்வு செய்தனர்.
இந்தநிலையில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா, தாசில்தார் க.பெருமாள், தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி, கிராம நிர்வாக அலுவலர் சரவணன் உள்பட வருவாய்த் துறையினர், போலீசார் சென்று 2 மணி நேரம் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ஆய்வின்போது பொதுமக்களிடம் இருந்து டெபாசிட் பெற்றதற்கான படிவங்கள், பொதுமக்களுக்கு வழங்கிய சான்றுகள், ரசீது புத்தகங்கள் மற்றும் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் ரூ.1 கோடியே 93 லட்சம் பொதுமக்களிடம் இருந்து வசூலானது தெரியவந்துள்ளது. இதுகுறித்து முழு விவரங்களையும், வங்கி வரவு, செலவு கணக்குகள், பணம் இருப்பு மற்றும் தங்கம் இருப்பு குறித்த விவரங்கள தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்து, சில ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து கோட்டாட்சியர் கவிதா கூறுகையில், 'மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணை குறித்து ஆட்சியர்ருக்கு தகவல் தெரிவிக்கப்படும்' என்றார்.