ஆரணி அருகே கால்வாய் அடைப்பை கண்டித்து பொதுமக்கள் தர்ணா போராட்டம்

கால்வாய் அடைப்பை கண்டித்து ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-07-22 07:39 GMT

ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தரையில் அமர்ந்து பொதுமக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆரணி அடுத்த ராட்டிணமங்கலம் காலனி பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் சேவூர் காலனி வழியாக செல்கிறது. இந்த கால்வாயை சேவூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் அடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கால்வாயில் கழிவு நீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சித் தலைவரிடமும், ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் இன்று ராட்டிணமங்கலம் காலனி பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்ததும் ஆரணி ஒன்றியக் குழு தலைவர் கனிமொழி சுந்தர், துணைத்தலைவர் கே.டி.ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அப்போது பொது மக்கள் தாலுகா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட சென்றதாகவும் அங்கு இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழ் உடனடியாக சென்று அவர்களை ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அழைத்து வந்தார். அங்கு வந்ததும் ஒன்றிய பொறியாளர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அனைவரிடமும் உறுதியளித்து அனுப்பி வைத்தார்.

Tags:    

Similar News