ஆரணி அருகே சுங்கச்சாவடியை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள வல்லம் சுங்கச்சாவடியை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
வேலூர்-ஆரணி சாலையில் கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு முன்னதாக சிறிது தொலைவில் வல்லம் ஊராட்சிக்குட்பட்ட சந்தனக்கொட்டா பகுதியில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இங்கு உள்ளூர் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதற்கு அந்தப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் ஊராட்சிமன்ற தலைவர்கள் வல்லம் சி.சிவக்குமார், கீழ்பள்ளிப்பட்டு விஜயபாஸ்கர், கீழ்அரசம்பட்டு வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் எழிலரசி அருள், வல்லம் கே.கே.எஸ். மணி கல்வி நிறுவன தாளாளர் எம்.ஜனார்த்தனம் உள்பட ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து சுங்கச்சாவடியை முற்றுகையிட்டனர்.
அப்போது சுங்கச்சாவடி பகுதியில் உள்ள கண்ணமங்கலம் மற்றும் அதைச்சுற்றி சுமார் 12 கி.மீ. தூரத்துக்குள் வசிக்கும் பொதுமக்கள் சொந்தமாக வைத்துள்ள கார் மற்றும் வாகனங்களுக்கு இலவச பாஸ் அல்லது அடையாள அட்டைகள் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மேலும் உள்ளூர் வாகனங்களை அடையாளம் காணும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட வேண்டும். பாஸ்ட்டேக் முறையை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும் சுங்கச்சாவடியில் மூன்று வாகன பாதை இருந்தும், சாலைகள் மிகவும் மோசமாக, விபத்து ஏற்படும் வகையில் சிதிலமடைந்து காணப்படுகிறது. முறைப்படி எவ்வித வசதிகளும் இல்லை என்பதால் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.